Published : 13 Apr 2018 09:20 AM
Last Updated : 13 Apr 2018 09:20 AM

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகரை கீழே தள்ளிய வடமாநில பயணிகள்: ரயில்வே காவல் துறையினர் விசாரணை

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகரை தாக்கி கீழே தள்ளிவிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த பயணிகள் குறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே காவல் துறையினர் கூறும்போது, ‘‘பெங்களூருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (35). டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா வரை செல்லும் ரயிலில் பணியில் இருந்தார்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு நள்ளிரவில் ரயில் வந்தபோது, எஸ்-12 பெட்டியில் பயணம் செய்த வட மாநில பயணிகள் 6 பேர் இருக்கைகளை மாற்றி அமர்ந்திருந்தனர். அப்போது, பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து சந்தோஷ் குமாரிடம் பயணிகள் சிலர் புகார் அளித்தனர். அதன்பேரில், அவர்களிடம் விசாரித்தபோது வாக்குவாதம் ஏற்பட் டது.

இதற்கிடையில், அந்த ரயில் காட்பாடி அருகே கரசமங்கலம் பகுதிக்கு அதிகாலை 2 மணியளவில் வந்தது. சிக்னலுக்காக ரயில் மெதுவாகச் சென்றபோது, வட மாநில பயணிகள் 6 பேரும் திடீரென சந்தோஷ் குமாரை தாக்கி ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் லேசான காயத்துடன் சந்தோஷ்குமார் உயிர் தப்பினார்.

பின்னர், காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்து நடந்த விவரங்களை சந்தோஷ்குமார் தெரிவித்தார். அதற்குள், அந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்றுவிட்டது.

இதுகுறித்து காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் சந்தோஷ்குமார் புகார் செய்தார். மேலும், வட மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரும் தனது பர்ஸில்இருந்த ரூ.8 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில், ஆய்வாளர் இளவரசி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார். இதுதொடர்பாக, எஸ்-12 பெட்டியில் பயணம் செய்த சந்தேக நபர் ஒருவரை திருப்பதி ரயில்வே காவல் துறையினர் பிடித்துள்ளனர். மற்றவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்த காட்பாடியில் இருந்து தனிப்படை காவலர்கள் திருப்பதிக்கு விரைந்துள்ளனர்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x