Published : 14 Apr 2018 08:06 AM
Last Updated : 14 Apr 2018 08:06 AM

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்எவ்வித முறைகேடும் செய்ய முடியாது; மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ், அதிக அளவில் தயாரிக்க நடவடிக்கை: பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் தகவல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்தவித முறைகேடும் செய்ய முடியாது என பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கவுதமா கூறினார்.

சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெற்று வரும் ராணுவ பாதுகாப்புக் கண்காட்சியை முன்னிட்டு, பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பில், முப்பரிமாண (3டி) கண்காணிப்பு ரேடார் அறிமுகப்படுத்தப்பட்டது.

நிறுவனத்தின் இயக்குநரும், மேலாண்மை இயக்குநருமான எம்.வி. கவுதமா இதனை அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது:

துல்லியமாக கண்காணிப்பு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், அமெரிக்காவுடன் இணைந்து முப்பரிமாண கண் காணிப்பு ரேடார் கருவியை தயாரித்துள்ளது. இக்கருவி குறைந்த மின்சாரத்தில் இயங்கக் கூடியது. அத்துடன், குறைந்த அளவு எடை கொண்டது. 400 கி.மீ. தூரம் வரையுள்ள எதிரிகளின் இலக்கை துல்லியமாகக் கண்காணித்து தகவல் அளிக்கும் திறமை கொண்டது. மேலும், தீ விபத்துகள் குறித்து முன்கூட்டியே அறிந்து தகவல் அளிக்கும் திறன் கொண்டது. இந்திய ராணுவத்தில் இந்த ரேடார் கருவி விரைவில் சேர்க்கப்படும்.

பாரத் எலக்ட்ரானிக் நிறுவனம் எம்-1, எம்-2, எம்-3 ரக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தயாரித்து வருகிறது. இந்த வாக்குப் பதிவு கருவியில் எந்தவித முறைகேடும் செய்ய முடியாது. காரணம், அந்த இயந்திரத்துக்குள் பொருத்தப்பட்டுள்ள மென்பொருள் பல்வேறு தணிக்கைகளுக்குப் பிறகே அதில் பொருத்தப்படுகிறது. இந்த வாக்குப் பதிவு இயந்திரகளின் சிறப்பை அறிந்து வெளிநாடுகளும் அவற்றை கொள்முதல் செய்ய முன்வந்துள்ளன.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி

தற்போது, மின்னணு சாதனங்கள் 60 வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ், இந்த மின்னணு சாதனங்களை உள்நாட்டிலேயே அதிக அளவில் தயாரித்து, வெளிநாட்டு இறக்குமதியை 30 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கவுதமா கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மூத்த துணை மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) அஷிஷ் கன்சால், துணை பொதுமேலாளர் எச்.ஏ. ஷிரின் சாமுவேல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x