கிருஷ்ணகிரியில் வறட்சியில் வாடும் மா மரங்களுக்கு லாரிகளில் நீர் வசதி: தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை

கிருஷ்ணகிரியில் வறட்சியில் வாடும் மா மரங்களுக்கு லாரிகளில் நீர் வசதி: தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: கிருஷ்ணகிரியில் வறட்சியால் வாடும் மா மரங்களைக் காக்க,லாரிகள் மூலம் தண்ணீர் வசதிஏற்படுத்திக் கொடுத்து, மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பெற்றுத் தர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் மாம்பழத் தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்வது சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விவசாயிகள் தான். 62 வெளி நாடுகளுக்கு மா கூழ் ஏற்றுமதியாகிறது. இதன்மூலம் அரசுக்கு ரூ.600 கோடி அந்நிய செலாவணி கிடைக்கிறது.

கிருஷ்ணகிரியில் உள்ள மாமரங்களில் 90 சதவீதம் மழைப் பொழிவையும், 10 சதவீதம் கிணறுநீர் நிலைகளையும் நம்பியுள்ளது. கிருஷ்ணகிரியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 90 ஏரிகளும் ஊராட்சிகள் கட்டுப்பாட்டில் 1,160 ஏரிகளும் 57,500 கிணறுகளும் உள்ளன.

திமுக அரசு பதவியேற்றபின் 3 ஆண்டுகளாக ஏரிகள் தூர் வாரப்படாததால் கடந்த 2 ஆண்டுகளில் பெய்த மழைநீர் சேமிக்கப்படவில்லை. மேலும், இந்த ஆண்டு90 சதவீத ஏரிகளும், 70 சதவீதகிணறுகளும் வறண்டு போயுள்ளன. இதனால், 90 சதவீதம் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், டிராக்டர் மூலம் நீர் எடுத்து வந்து மரங்களுக்கு ஊற்றி விவசாயம் செய்து வருகின்றனர். இவ்வாறு ஒரு ஏக்கருக்கு 5 முறை தண்ணீர் பாய்ச்ச ரூ.25 ஆயிரம் செலவழிக்கின்றனர்.

மழை தொடர்ந்து பெய்யாததால், ஆழ்துளைக் கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லை. விளைவித்த மாம்பழங்களுக்கு போதிய விலையும் கிடைப்பதில்லை. தண்ணீருக்காக அதிகம் செலவழித்ததை கணக்கில் கொண்டு, குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், மரங்களை காப்பாற்ற அரசு சார்பில் அருகில் உள்ள நீர் நிலைகளில் இருந்து லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், திமுக அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சியால் வாடும் மாமரங்களைக் காக்க, லாரிகள் மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்து, விளைந்த மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை பெற்றுத் தர வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in