

மதுரை/விருதுநகர்: பேராசிரியை நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளை தவறாகப் பயன்படுத்தத் திட்டமிட்டார் என்பதையும் விசாரிக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறானப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக எழுந்த புகார் தொடர்பாக சிபிசிஐடிபோலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தமிழகஆளுநர் மாளிகையைத் தொடர்புபடுத்தி பரபரப்பான கருத்துகள் வெளியாகின. ஆனால், இதைஆளுநர் மாளிகை மறுத்தது.
இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணைக் குழுவை அமைத்து, அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். சந்தானம் குழு விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்தது.
இந்தக் குழுவின் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தவர்களில் மதுரை அண்ணா நகரைச்சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமாரும் ஒருவர். அவர் நிர்மலாதேவி வழக்கின் தீர்ப்பு குறித்து கூறியதாவது:
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சந்தானம் குழுவின் முன்னிலையில் நான் ஆஜராகி, வாக்குமூலம் அளித்தேன். அப்போது, "நிர்மலாதேவியால் ஏராளமான மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மைனர் என்பதால், புகார் அளிக்க முன்வரவில்லை. எனவே, அவர்களிடமும் விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்தேன்.
தற்போது நிர்மலாதேவி மாணவிகளை தவறாகப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன். அதேநேரத்தில், நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளை தவறாகப்பயன்படுத்தினார் என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அதுகுறித்தும் தனியாக விசாரிக்கவேண்டும். குற்றவாளிகள் யாரும்தப்பக் கூடாது. இந்த விசாரணையை மேற்கொண்டால்தான், இந்த வழக்கு முழுமையடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் புலன் விசாரணை: பேராசிரியை நிர்மலாதேவியின் முன்னாள் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது: இந்தவழக்கில் சம்பந்தப்பட்ட பலர் தண்டனையில் இருந்து தப்பித்துள்ளனர். உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் சிக்கவில்லை. நிர்மலாதேவியை மட்டுமே முன்னிறுத்தி, வழக்கை முடித்துவிட்டார்கள்.
சிபிசிஐடி அதிகாரிகள் இந்தவழக்கை சரியாக விசாரிக்கவில்லை. உண்மையான குற்றவாளிகள் தப்பித்துள்ளனர். பல ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளன. எனவே, மீண்டும் புலன் விசாரணைநடத்தி, தப்பித்த கருப்பு ஆடுகளைத் தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறும்போது, இதுபோன்ற சமுதாயத்துக்கு எதிரான வழக்குகளில், குற்றவாளிக்கு இரக்கம் காட்டக் கூடாது என்று நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் வலியுறுத்தினோம். அதன்படி, 5 சட்டப் பிரிவுகளுக்கும் தனித்தனியாக தண்டனை வழங்கப்பட்டது. அதை ஏககாலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ஏற்கெனவே சிறையில்இருந்த காலத்தை கழித்துக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சாட்சிகளில் சிலர் பிறழ்சாட்சியாக மாறியதால், இந்த வழக்கிலிருந்து உதவிப் பேராசிரியர் முருகனும், ஆய்வு மாணவர் கருப்பசாமியும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என்றார்.
மேல்முறையீடு செய்வோம்: பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் கூறும்போது, இந்த வழக்கில் தண்டனையைக் குறைத்து வழங்குமாறு கேட்டிருந்தோம். ஆனால், அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் கைது செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருக்காகவே பேராசிரியை நிர்மலாதேவி பேசிய ஆடியோ வெளியானது. அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டதால், பேராசிரியை நிர்மலாதேவியும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்தான். எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து ஒரு வாரத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றார்.