Published : 01 May 2024 04:06 AM
Last Updated : 01 May 2024 04:06 AM

ஆக்கிரமித்து கட்டிய பாஜக பிரமுகர் வீடு இடிப்பு @ புதுச்சேரி

புதுச்சேரி சேதராப்பட்டில் அரசு கையப்படுத்தப்பட்ட இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட பாஜக பிரமுகரின் வீட்டை ஜேசிபி இயந்திரம் மூலம்வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

புதுச்சேரி: ஊசுடு அருகே சேதராப்பட்டு-, கரசூர் பகுதிகளில் 749 ஏக்கர் விவசாய மற்றும் தரிசு நிலங்கள், கடந்த 2006-2007- ம் ஆண்டு முதல்வர் ரங்கசாமி ஆட்சியின்போது கையகப்படுத்தப்பட்டு, சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது.

அப்போது ஒரு சிலர் இடங்களை தர மறுத்தனர். அவர்களிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்தை அரசு கையகப்படுத்தியது. கையகப் படுத்தப்பட்ட அனைத்து இடங்களுக்கும் அரசு நிர்ணயித்த விலை வழங்கப்பட்டது. இதில் கரசூரைச் சேர்ந்த செல்வராசு என்பவர், அரசு கையகப் படுத்திய தனது நிலத்தை வழங்க மறுத்துவிட்டார். ஆனால் அவருக்கு சேர வேண்டிய நிலத்தின் தொகை நீதிமன்றத்தில் அரசு தரப்பில் செலுத்தப் பட்டது. அத்தொகையை அவர் பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த செல்வராசு தற்போது ஊசுடு தொகுதி பாஜக கேந்திர பொறுப்பாளராக உள்ளார்.

இந்நிலையில்சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பிப்டிக் வசம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் இங்கு பொருளாதார மண்டலம் ஏதும் அமையவில்லை. கையகப்படுத்தப்பட்ட இடங்கள்அனைத்தும் அப்படியே பயன்படுத்தப்படாமல் தரிசாகதான் உள்ளது. இந்நிலையில் செல்வராசு வங்கியில் கடன் வாங்கியும் ரூ. 50 லட்சத்தில் கடந்தாண்டு அங்கேயே வீடு கட்டினார். வீடு கட்டுமான பணியின் போது, அங்கு வீடு கட்டக்கூடாது என வில்லியனூர் வருவாய்த்துறை அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

தனக்கு வேறு இடம் இல்லாததால், இங்கு தான் வீடு கட்டி குடியேற வேண்டும் என அப்போது செல்வராசு விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டை இடிக்க வில்லியனூர் வட்டாட்சியர் தலைமையில் பொதுப்பணித் துறை மற்றும் போலீஸார் அங்கு வந்தனர். அப்போது செல்வராசு, அவரது மனைவி சுதா மற்றும் அவரது உறவினர்கள் வீட்டை இடிக்க வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் வில்லியனூர் துணை ஆட்சியர் சோம சேகர அப்பா ராவ் கொட்டாரு தலைமையில் வட்டாட்சியர் சேகர், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் கார்த்திகேயன், பிப்டிக் மேலாளர் ராகிணி, எஸ்பி வீரவல்லவன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் பொதுப்பணித் துறை ஊழியர்கள், நில அளவை துறை ஊழியர்கள் போலீஸார் என 85 பேர் நான்கு ஜேசிபி இயந்திரங்களுடன் நேற்று கரசூர் சென்றனர். அங்கு செல்வராசு வீட்டின் உள்ளே உள்ள பொருட்களை வெளியே எடுக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு செல்வராசு, அவரது மனைவி மற்றும் அவரது உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் போலீஸாருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு வாக்கு வாதம் ஏற்பட்டது. செல்வராசு குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 10 பேரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி கோரிமேடு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீ ஸார் குவிக்கப் பட்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் செல்வராசு வீடு முற்றிலும் இடிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x