

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளி, கோயில்களை தூய்மைப்படுத்தும் சேவை பணியில், கடந்த நான்கு ஆண்டுகளாக திருப்பூர் ‘நலம்’ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பின்னலாடை தொழில்துறையை சேர்ந்தவரும், ‘நலம்’ அமைப்பாளருமான ஆர்.கோபாலகிருஷ்ணன் கூறியது:
திருப்பூர், ஈரோடு, கோவை, புதுக்கோட்டை, பெரம்பலூர், கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாதந்தோறும் அரசுப் பள்ளி அல்லது கோயிலை தேர்வு செய்து தூய்மைப்படுத்துவதுடன், பள்ளிச் சுவர்களுக்கு வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம். இதற்கான செலவுகள் அனைத்தையும் அமைப்பு சார்பில் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்.
இந்த அமைப்பில் 100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் மாதம் ஒருமுறை அரசுப் பள்ளி அல்லது பராமரிக்கப்படாத கோயிலை தூய்மைப்படுத்தி, வர்ணம் பூசி வருகிறேம். இதுவரை 20 பள்ளிகள், 23 கோயில்களில் இப்பணிகளை மேற் கொண்டுள்ளோம். அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் அனைவரும் தொழில்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள். பெண்கள் ஆர்வத்துடன் இப்பணியில் பங்கேற்பது பாராட்டுக்குரியது.பராமரிக்கப்படாத அரசுப் பள்ளி, கோயிலை தூய்மைப்படுத்த, தமிழகத்தின் எந்தப் பகுதிகளுக்கு வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம் என்றார். தொடர்புக்கு 73730-29695 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.