Published : 30 Apr 2024 05:35 AM
Last Updated : 30 Apr 2024 05:35 AM

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை: அமலாக்கத்துறை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

கோப்புப்படம்

புதுடெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணையை அமலாக்கத்துறை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக அவரது தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை மே 6-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ல் கைது செய்தனர். அவருக்கு இதுவரையிலும் ஜாமீன் கிடைக்கவில்லை.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், இந்த வழக்கில் ஏப்.28-ல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இன்று (ஏப்.29) இந்த வழக்குவிசாரணைக்கு வரும் நிலையில் நேற்றிரவு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது இன்றைய விசாரணைக்கு எப்படி பிரயோஜனமாக இருக்கும்’’ என அதிருப்தி தெரிவித்து, இந்த வழக்கை வேறு தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்றனர்.

அதற்கு அமலாக்கத்துறை தரப்பில், ‘‘இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது. பல்வேறு விஷயங்களை மிகவும் உன்னிப்பாக பார்க்க வேண்டியுள்ளது. எனவேதான், பதில் மனு தாக்கல் செய்ய காலதாமதம் ஆனது’’ என பதிலளிக்கப்பட்டது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், ‘‘இத்தனை நாட்கள் அவகாசம் அளித்தும் இன்று இந்தவழக்கு விசாரணைக்கு வருகிறதுஎன தெரிந்து, நேற்றிரவு அமலாக்கத்துறை அவசர அவசரமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என அமலாக்கத்துறை நினைக்கிறது.

கடந்த 320 நாட்களாக மனுதாரர் ஜாமீன் கிடைக்காமல் சிறைக்குள் இருக்கிறார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அமலாக்கத்துறை இந்த வழக்கின் ஒவ்வொரு விஷயத்தையும் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறது.

இந்த வழக்கே சில நபர்களுக்கு இடையிலான கொடுக்கல், வாங்கல் பிரச்சினை. ஆனால், அதை செந்தில் பாலாஜியை மனதில் வைத்துக்கொண்டு சில நிறுவனங்களுக்கு இடையிலான மோசடி வழக்காக கட்டமைக்கப் பார்க்கின்றனர்’’ என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை மே 6-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x