Published : 30 Apr 2024 05:02 AM
Last Updated : 30 Apr 2024 05:02 AM
சென்னை: மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் அறைகளை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாக இயங்க வேண்டும், அந்த அறைகளை சுற்றிலும் 500 மீட்டருக்கு ட்ரோன்கள்பறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் திமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை சந்தித்த திமுக சட்டப்பிரிவு செயலாளர் என்.ஆர்.இளங்கோ, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மனுவை அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் அறையை சுற்றி உள்ள சிசிடிவி கேமராக்கள் கடந்த 27-ம் தேதி 20 நிமிடங்களுக்கு இயங்காமல் போய்விட்டன. அதற்கு, தொடர்ச்சியாக இயங்கியதால் மின் இணைப்பில் பழுது ஏற்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிக்கை அளித்தார்.
இந்த நிகழ்வு, எந்த ஒரு ஸ்டிராங் அறைக்கும் ஏற்படக் கூடாது, பழுதின்றி முழுமையாக இயங்க வேண்டும். வேட்பாளர்கள், ஏஜென்ட்கள் பார்க்க விரும்பினால் அந்த சிசிடிவி பதிவுகளை தர வேண்டும் என்றும் கேட்டு மனு அளித்துள்ளோம். தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் அறையை சுற்றிலும் குறைந்த பட்சம் 500 மீட்டர் சுற்றளவுக்கு, எந்த ட்ரோன் போன்ற சாதனங்களை இயக்குவதற்கும் அனுமதிக்கக் கூடாது என இரண்டு கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் வைத்துள்ளோம்.
இந்த கோரிக்கை மனுவை தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளோம். நாங்கள் அளித்த மனுவுக்கு தலைமை தேர்தல் அதிகாரி, ட்ரோன் பறக்க அனுமதியில்லாத பகுதி குறித்து பரிசீலித்து காவல்துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாகவும், சிசிடிவி கேமராக்கள் பழுதடையாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
ஈரோட்டில் சிசிடிவி கேமரா பழுதுக்கு ‘ஷாட் சர்க்யூட்’ பிரச்சினை காரணமாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து கட்சிகளின் முகவர்களையும் அழைத்துச் சென்று ஸ்டிராங் அறை சரியாக இருக்கிறது என்பதையும் உறுதி செய்துள்ளனர். வெப்பம் அதிகமாக இருப்பதால் அதற்கான குளிரூட்டும் சாதனங்களை வைப்பதாகவும் உறுதியளித்துள்ளனர். எங்கள் கட்சியின் முகவர்கள் அங்கு சென்று பார்க்கும் போது ஸ்டிராங் அறையில் வைக்கப்பட்ட சீல்கள் எதுவும் பழுதடையாததால் நாங்கள் திருப்தியடைந்துள்ளோம்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சீரமைப்பார்கள். தேர்தல் வரும்போது, குறைந்த பட்சம் 3 தடவையாவது வரைவு பட்டியல் வெளியிடுவார்கள். சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது. அதில் அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் விடுபட்ட பெயர்களை சேர்க்கலாம், நீக்க வேண்டியவர் பெயர்களை நீக்க கோரலாம். வாக்காளர்களும் தங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்யலாம்.
மக்களுடன் இணைந்து பணியாற்றுபவர்களுக்கு இது தெரியும், வாட்ஸ் அப், பேஸ்புக்கில் கட்சி நடத்துபவர்களுக்கு இந்த விவரம் தெரியாது. இவ்வாறு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT