தமிழகத்தில் மக்களவை தேர்தல் கால சோதனையில் ரூ.1,309 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கால சோதனையில் ரூ.1,309 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களால் கடந்த 28-ம் தேதி நிலவரப்படி, ரூ.1,309.52 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்கடந்த மார்ச் 16-ம் தேதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து,அப்போதே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

இதையடுத்து, பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள், பொருட்கள், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்ல உரிய ஆவணங்கள் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு ஆவணங்கள் இல்லாத பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.10 லட்சத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த வகையில், தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வருமான வரித்துறையினர் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தது. இதைத் தொடர்ந்து, உள் மாவட்டங்களில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. இருந்தபோதிலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. அந்த மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வருமானவரித் துறையினர் நடத்திய சோதனைகளில் ஏப்.28-ம் தேதி காலை 9 மணி வரை ரூ.179.91 கோடி ரொக்கம், ரூ.8.6 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.1.36 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் ரூ.1,083.78 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள், ரூ.35.80 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் என மொத்தம் ரூ.1,309.52 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதில், உரிய ஆவணங்கள் இருந்ததால் சென்னை விமானநிலையத்தில் இருந்து எடுத்துவரப்பட்டு, குன்றத்தூர் அருகே அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.950 கோடி மதிப்புள்ள 1,425 கிலோ தங்கம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் திருப்பி அளிக்கப்பட்டது. இவ்வாறு சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. தற்போது தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில்நடத்தை விதிகளை விலக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனால் அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கட்சிகள் கூறியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in