Published : 25 Apr 2018 04:46 PM
Last Updated : 25 Apr 2018 04:46 PM

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்

சிற்றெறும்பு என கமல்ஹாசனை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சிக்க, யானை காதில் புகுந்த சிற்றெறும்பு என கமல் திரும்பக் கலாய்க்க, அதிமுக ஒரு யானை நீங்கள் பூனை என்று திரும்ப அமைச்சர் ஜெயக்குமார் கமல்ஹாசனைக் கிண்டலடித்துள்ளார்.

தமிழக அரசியலில் நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. ரஜினி, கமல் இருவரும் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் மோதல் அரசியல் அரங்கை சுவாரஸ்யப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கமல்ஹாசன் குறித்து பேசும் போது, 'கட்டெறும்பு சிற்றெறும்பாகி விட்டது' என்று விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு கோபத்துடன் பதிலளித்த கமல்ஹாசன், 'நான் சிற்றெறும்பு தான் அது யானைக்காதில் புகுந்தால் என்ன ஆகும் தெரியுமா?' என்று கேட்டார்.

’நீங்கள் யானை அல்ல, அவ்வளவு தகுதி இல்லை. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

’’அதிமுக பெரிய அளவுக்கு எல்லோருக்கும் நல்லது செய்யக்கூடிய இயக்கம். அது ஒரு இமயம், ஒரு யானை என்றுகூட சொல்லலாம். கட்டெறும்பு, சிற்றெறும்பு என்று ஏற்கெனவே சொன்னேன். பூனைகள் எல்லாம் யானையைப் பார்த்து சூடு போட்டுக்கொள்ளக்கூடாது.

பூனை, பூனை தான். இன்றைக்கு மய்யம் ஆரம்பித்த சில நாட்களிலேயே அவரது கட்சியிலிருந்து அட்வகேட் ஒருவர் விலகி விட்டார். இப்போது நடிகை ஸ்ரீப்ரியாவும் அந்த அட்வகேட் வழியில் விலகப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆரம்பித்த சில நாட்களிலேயே 16 பேரை கட்டிக்காக்க முடியாத கமல்ஹாசன் எப்படி ஒரு நாட்டை நிர்வாகிக்க முடியும் என்று எண்ணிப் பார்க்கவேண்டும். யானை யானைதான், பூனை பூனைத்தான் என்பதை உணரவேண்டும்.''

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கமல்ஹாசனைக் கிண்டலடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x