

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள கிணற்றில் புதையல் கிடைத்ததாகவும், அதை கோயில் நிர்வாகம் கணக்கில் காட்டாமல் பதுக்கிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், இது தவறான தகவல் என கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் மூலவர் சந்நிதிக்கு பின்புறம் 15 அடி ஆழ கோடைக்கிணறு உள்ளது. இந்தக் கிணற்றை அண்மையில் சுத்தம் செய்தபோது, தங்கம், வெள்ளி உள்ளிட்டவை அடங்கிய புதையல் கிடைத்ததாகவும், அதை கோயில் நிர்வாகம் கணக்கில் காட்டாமல் பதுக்கிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ காட்சியுடன் தகவல் பரவியது.
ஆனால், இது தவறான தகவல் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கூறியது:
இந்தக் கிணற்றை ஆண்டுதோறும் சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி, 10 நாட்களுக்கு முன்பு சுத்தம் செய்தபோது ஏராளமான சில்லறை காசுகள் இருந்தன. இவை கோயிலுக்கு வரும் பக்தர்கள் கிணற்றில் போட்டுச் சென்ற காசுகள் ஆகும். இந்தக் காசுகள் மாதக்கணக்கில் நீரில் கிடந்ததால் கறுப்பாக மாறிவிட்டன. அந்த காசுகளை சுத்தம் செய்ய 3 நாட்கள் ஆகிவிட்டது. இவை தற்போது லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன.
கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும்போது, இந்தக் காசுகளும் அதனுடன் சேர்த்து கணக்கிடப்படும். கிணற்றிலிருந்து காசுகளை எடுத்துச் சென்றதை, சிலர் வேண்டுமென்றே தங்கம், வெள்ளிப் பொருட்கள் அடங்கிய புதையல் கிடைத்ததாக திரித்து தகவல் பரப்பிவிட்டனர். இதுகுறித்து அறநிலையத் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றனர்.