Last Updated : 29 Apr, 2024 04:18 PM

 

Published : 29 Apr 2024 04:18 PM
Last Updated : 29 Apr 2024 04:18 PM

நிர்மலா தேவி வழக்கில் இருவர் விடுதலை ஏன்? - சிபிசிஐடி வழக்கறிஞர் விவரிப்பு

விடுவிக்கப்பட்ட இருவர் (இடது) | சிபிசிஐடி வழக்கறிஞர் சந்திரசேகர் (வலது)

ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் பிறழ் சாட்சியம் அளித்ததால் உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக சிபிசிஐடி வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்தார்.

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என விருதுநகர் 2-வது நீதித்துறை நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விவரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.30) அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் 2-ஆம் மற்றும் 3-ஆம் குற்றவாளிகளான பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. முருகன், கருப்பசாமி மீது சுமத்தப்பட்ட குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் இருவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் சிபிசிஐடி தரப்பு அரசு வழக்கறிஞர் எம்.சந்திரசேகர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “சமூகத்துக்கு தேவையான ஒரு தீர்ப்பை இந்த நீதிமன்றம் வழங்கியுள்ளது. முதல் குற்றவாளி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும், 2 மற்றும் 3-வது குற்றவாளிகளுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அவர்களுக்கும் தண்டனை வழங்கக் கூடிய சாட்சிகள் இருப்பதாக அரசு தரப்பு கருதுகிறது. இது குறித்து மேல் முறையீடு செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய தண்டனைச் சட்டம் 370(1), 370(3), பாலியல் தொழில் தடுப்புச் சட்டம் 5 (1a), 9, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் நிர்மலா தேவி குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை ஆண்டுகள் தண்டனை என்பதை நாளை (செவ்வாய்க்கிழமை) தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்மலா தேவி வழக்கறிஞர் தங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். நாங்கள் இன்றைக்கே தண்டனை விவரங்களை அறிவிக்க வேண்டும் என முறையிட்டோம்.

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் சார்பில் சிறப்பான விசாரணை செய்யப்பட்டது. ஆனால், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் 2 மற்றும் 3-வது குற்றவாளிகளான உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கு சாதகமாக பிறழ் சாட்சியமாக மாறியதால் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் ஆவணங்களை தாக்கல் செய்து இருந்தோம். நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். அவர்களுக்கு எதிராக தகுந்த ஆதாரங்களை தயார் செய்து மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்.

கல்லூரி மாணவிகள் தாங்கள் பாதிக்கப்பட்டதை, என்ன நடந்ததோ அதை மிகத் தெளிவாக நீதிபதியிடம் கூறி இருக்கிறார்கள். அவர்களுக்கு 2 மற்றும் 3-வது எதிரிகள் குறித்து தெரியாது. ஆனால், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இருப்பவர்களுக்காக நிர்மலா தேவி பேசியதாக மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கில் 104 அரசு தரப்பு சாட்சிகளில் 82 காட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 194 ஆவணங்கள், 46 சான்று பொருட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் அவர்களுடன் பணியாற்றியவர்கள் பிறழ் சாட்சியம் அளித்ததால் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசு பதவிகளில் இருந்து கொண்டு பிறழ் சாட்சியம் அளித்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்புகிறோம்" என்று கூறினார்.

வழக்கு பின்னணி: அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவண பாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலா தேவி (52). அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணித உதவி பேராசிரியர். இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, தவறாக வழிநடத்தியதாக 2018 மே மாதம் ஆடியோ ஒன்று வைரலானது.

அதையடுத்து, நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரை கைது செய்யக் கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதையடுத்து, நிர்மலாதேவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் கல்லூரி செயலாளர் ராமசாமி புகார் அளித்தார். நிர்மலா தேவி மீது மாணவிகள் 5 பேரும் புகார் தெரிவித்தனர்.

மாணவிகளின் புகார் கடிதம், நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கடிதம், மாணவிகளுக்கு அவர் அனுப்பிய குறுந்தகவல்கள், கல்லூரி கல்வி இணை இயக்குநரின் அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் 2018, ஏப். 16-ம் தேதி வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர்.

பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர் விசாரணையில், பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். நிர்மலா தேவி உட்பட 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பப் பரிமாற்ற முறைகேடு தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x