Published : 29 Apr 2024 05:00 AM
Last Updated : 29 Apr 2024 05:00 AM

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு | சிபிசிஐடி வசம் ஆவணங்கள் ஒப்படைப்பு: விரைவில் விசாரணை தொடங்குகிறது

சென்னை: நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடி பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணை ஆவணங்கள் அனைத்தும் அப்பிரிவு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு கடந்த 6-ம் தேதி புறப்பட்டுச் சென்ற நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது, அந்த ரயிலில் ‘எஸ் 7’ பெட்டியில் பயணம் செய்த, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களான சென்னை கொளத்தூர் திரு.வி.க.நகரைச் சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் பகுதியை சேர்ந்த பெருமாள் ஆகிய 3 பேரும் வைத்திருந்த 6 பைகளை சோதனையிட்டதில், ஆவணமின்றி கொண்டு சென்ற சுமார் ரூ.4 கோடி (ரூ.3 கோடியே 98 லட்சத்து 91,500) பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைக்கு பின்னர், 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். மேலும் இதுதொடர்பாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஹோட்டல், சாலிகிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீடு ஆகிய இடங்களிலும் அடுத்தடுத்து சோதனை செய்யப்பட்டது.

வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகியான சென்னையைச் சேர்ந்த கோவர்த்தனன் உட்பட 8 பேருக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணையில் ஆஜராவதற்கு 10 நாட்கள் அவகாசம் தரும்படி நயினார் நாகேந்திரன் கடந்த 22-ம் தேதி கோரினார். 3 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இதற்கிடையே இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றும்படி, தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்று சங்கர் ஜிவால், அந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

இதன்தொடர்ச்சியாக தாம்பரம் மாநகர காவல்துறையிடமிருந்த வழக்கின் ஆவணங்கள், விசாரணை விவரங்கள் அனைத்தும் சிபிசிஐடி பிரிவு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக அந்த பணத்துக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்களை தாம்பரம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் முன்னிலையில், விசாரணை அதிகாரியான சிபிசிஐடி காவல் ஆய்வாளர் லோகநாதனிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இந்த வழக்கில் தாம்பரம் போலீஸார் இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தி, சுமார் 350 பக்க விசாரணை அறிக்கையை தயார் செய்திருந்தனர். இதுபோக கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அனைத்தும் தற்போது சிபிசிஐடி பிரிவு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x