

சென்னை: தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோடைகால வெயிலின் தாக்கம் இயல்பைவிட அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால், வரும் நாட்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தட்பவெப்ப நிலை மாற்றத்தால் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து இருப்பதால், மனிதர்களுக்கு வெப்பம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக, உடலியல் ரீதியான மன அழுத்தம், உயிரிழப்பு ஏற்படலாம். எனவே, அனைத்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோடைகால பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதுடன், வெயில் அதிகமாக இருக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வெயில் அதிகமாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து, முகாம் அமைத்து, ஓஆர்எஸ் என்ற உப்பு சர்க்கரை குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையில், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஓஆர்எஸ் பவுடர் காலியாகும்பட்சத்தில், அதனை அனைத்து வட்டார சுகாதார அலுவலர்களும் உடனடியாக நிரப்ப வேண்டும். அத்துடன், குடிநீரின் தரத்தையும் உறுதி செய்ய வேண்டும். மாவட்டந்தோறும் உள்ள மருந்து கிடங்குகளில் போதியளவில் ஓஆர்எஸ் பவுடர் அனுப்பப்பட்டுள்ளது. அவற்றை பெற்று, பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.