

ராமேசுவரம்: இலங்கையின் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பை இந்திய - ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையின் முன்னாள் அதிபர்மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 2009-ல் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள மத்தளவில் 2,000 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்னர், இந்த விமான நிலையத்துக்கு மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் எனப் பெயரிட்டு, 2013 மார்ச் 19-ம் தேதி மகிந்த ராஜபக்ச திறந்துவைத்தார்.
ரூ.1,300 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த விமான நிலையத்தில் 3,500 மீட்டர் நீளமும், 75 மீட்டர் அகலமும் உள்ள ஓடுபாதையும், 115 அடி உயர கட்டுப்பாட்டு கோபுரமும் உள்ளது.
இந்த விமான நிலையத்தில் இருந்து விமான சேவையைத் தொடங்க தனியார் விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், இந்த விமான நிலையம் நஷ்டத்தில் இயங்கி வந்தது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன தேர்வு செய்யப்பட்ட பின்னர், 2015 பிப். 9-ம் தேதி இந்த விமான நிலையத்தின் சேவைகள் நிறுத்தப்படுவதாக இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.
அம்பாந்தோட்டை துறைமுகம்: இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ளதால், அதன் அருகில் உள்ள மத்தள விமான நிலையத்தை இந்தியா குத்தகைக்கு எடுக்கும்முயற்சியில் 2016-ம் ஆண்டிலிருந்தே முயற்சித்து வந்தது. 2018-ம் ஆண்டு இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்க இலங்கை அரசு ஒப்புக்கொண்டபோது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால் குத்தகைக்கு எடுக்கும் முயற்சி தடைப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் ஷௌர்யா ஏரோநாட்டிக்ஸ் மற்றும்ரஷ்யாவின் ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜியன்ஸ் மேனேஜ்மென்ட் ஆகிய2 நிறுவனங்கள் கூட்டாக மத்தளராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகள் நிர்வாகம் செய்வதற்கான மேலாண்மை ஒப்பந்தத்துக்கு, இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
இந்தியர்களுக்கு அடுத்தபடியாக ரஷ்யர்கள் இலங்கைக்கு அதிக அளவில் சுற்றுலா சென்று வரும் நிலையில், இந்த 2 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் விமான நிலைய நிர்வாகப் பொறுப்பை ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.