Published : 29 Apr 2024 06:10 AM
Last Updated : 29 Apr 2024 06:10 AM

பல கோடி செலவில் உருவாக்கப்பட்ட மியாவாக்கி அடர்வனத்தை பாதுகாக்க பாஜக வலியுறுத்தல்

சென்னை: சென்னை அடையாறு பகுதியில் பல கோடி செலவில் அமைக்கப்பட்ட மியாவாக்கி அடர்வனத்தை பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் ரயில்வே நிலையம் அருகே மியாவாக்கி நகர்ப்புற அடர்வனம் அமைந்துள்ளது. பல கோடி ரூபாய் செலவில் 3 ஆண்டுகளுக்கு முன்பு 7,050 மரக்கன்றுகளை நட்டு இந்த வனம் அமைக்கப்பட்டது.

உண்மையில் அருமையான சூழ‌ல், சிறந்த திட்டம். இதன் நடுவே காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொள்வது இனிமையான அனுபவம்.இந்த வனத்தில் உள்ள மரங்களுக்கு நீர் பாய்ச்ச 4 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், தண்ணீர் பாய்ச்ச மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.

பல கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த வனத்தில் நீர் இல்லாமல், செடி, கொடி, மரங்கள் வாடிக்கொண்டு இருப்பது சோகம். எங்கெங்கும் சருகுகள் காணப்படுவதோடு, முறையான பராமரிப்பு இல்லாததால், பாம்புகள் தென்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

அரசு நிர்வாகமின்மை அல்லது நிர்வாக சீர்கேட்டுக்கு இது சிறந்த உதாரணம். ஒரு சிற‌ந்த படைப்பை உருவாக்கி, திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் அதை சீர்கெட செய்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா?இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x