Published : 29 Apr 2024 04:02 AM
Last Updated : 29 Apr 2024 04:02 AM

மாநில நெடுஞ்சாலை துறை மறுசீரமைப்பு: ஓய்வு பெற்றோரை மீண்டும் பணியமர்த்தும் முடிவுக்கு எதிர்ப்பு

பிரதிநிதித்துவப் படம்

மதுரை: மாநில நெடுஞ்சாலைத் துறை மறு சீரமைப்பு செய்யப்படும் நிலையில், இதில் ஓய்வு பெற்றோரை மீண்டும் பணியில் நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் 1946-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை, மாநிலம் முழுவதும் 70,566 கி.மீ., சாலைகளைப் பராமரித்து வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத் துறையில் தற்போது 10 தலைமைப் பொறியாளர் பணியிடங்கள் உள்ளன. சாலைகள் தவிர, கட்டுமானம், பராமரிப்பு போன்றவற்றையும் இத்துறை நிர்வகிக்கிறது. மொத்தம் 9 மண்டலங்கள் உள்ளன. இத்துறைகளின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகள், நபார்டு மற்றும் கிராமச் சாலைகள், திட்டங்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மண்டல தர ஆய்வகங்கள் உள்ளன.

இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைத் துறையை மறு சீரமைப்பதாகக் கூறி தனித் தனியாக செயல்படக் கூடிய நபார்டு, கிராமச் சாலைகள், திட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை நெடுஞ்சாலைத் துறையுடன் இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறு சீரமைப்பில் ஓய்வு பெற்றோருக்கு மீண்டும் பணிபுரிய வாய்ப்பு கொடுக்க தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் என நெடுஞ்சாலைத் துறையினர் கவலை தெரிவிக்கிறார்கள். இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறியதாவது: 10 தலைமைப் பொறியாளர் கட்டுப்பாட்டில் உள்ள இத்துறை நிர்வாகத்தை ஒரே ஒரு தலைமைப் பொறியாளரின் கீழ் சென்னையில் இருந்து இயக்கும் வகையில் கொண்டுவர மறு சீரமைப்பில் முடிவு செய்து உள்ளனர். இவர்கள் தவிர, 3, 4 தலைமைப் பொறியாளர்கள் இருப்பார்கள். அவர்கள் வெவ் வெறு நிர்வாகத்தைக் கவனிக்கும் வகையில் செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சி, கோவை, திருவண்ணாமலை, மதுரை ஆகிய இடங்களில் மட்டும் மண்டல அலுவலகங்கள் அமைத்து அதற்குத் தலைமைப் பொறியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த மறுசீரமைப்பு ஓய்வுபெற்றோரை மீண்டும் பணிக்குக் கொண்டு வருவதற்கான வடிவமாகவே உள்ளது. தற்போது தலைமைப் பொறியாளர் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை நெடுஞ்சாலைத் துறையில் 6,320 பணியாளர்கள் உள்ளனர்.

இவர்கள் தவிர, திட்டம் சார்ந்த பணியாளர்களாக சாலைப் பணியாளர்கள் 10 ஆயிரம் பேர், சாலை ஆய்வாளர்கள் 2 ஆயிரம் பேர் உள்ளனர். மொத்தம் 18 ஆயிரம் பணியாளர்கள் இத்துறை யில் பணிபுரிகிறார்கள். 3 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போல் தமிழ்நாடு அரசும் மாநில நெடுஞ்சாலை ஆணை யத்தை உருவாக்க ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையச் சாலைகளைப் போல், மாநில சாலைகளிலும் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டமும் உள்ளது.

தற்போது இந்து அறநிலையத் துறை, சிப் காட் துறைகளைப் போல், நெடுஞ்சாலைத் துறையிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கு வதற்குப் பதிலாக ஓய்வு பெற்றோரை மீண்டும் அதே பணியில் நியமிக்கக் கூடிய நடவடிக்கை நடந்து வருகிறது. இதை முதல்வர் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஓய்வு பெற்றோர் அரசுப் பணியில் இருக்கும் போது அவர்கள் தவறு செய்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் பணியாற்றினால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புப் பறிப்போகிறது. தமிழக அரசு இந்த நடவடிக்கையைக் கைவிடவில்லை என்றால் எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு 80 சதவீதம் கூட இருக்காது, என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x