Published : 11 Apr 2018 07:41 PM
Last Updated : 11 Apr 2018 07:41 PM

பிரதமருக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டம்: எதிர்க்கட்சியினர் முன்னெச்சரிக்கை கைது?

பிரதமருக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக அனைவரையும் கைது செய்ய காவல்துறை தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் காலக்கெடு முடிந்த நிலையில் மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்காதது குறித்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் அவசர தலைமை செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. சென்னை வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட முடிவெடுக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் உச்சநீதிமன்றத்தில் இழுத்தடிக்கும் போக்கை கண்டித்து தமிழகம் முழுதும் ஆவேச போராட்டங்கள் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் அடிக்கடி கூடி அடுத்தடுத்த போராட்டம் குறித்து முடிவெடுக்கின்றனர்.

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் காவிரி மீட்பு நடைபயணம் துவக்கப்பட்டது. இரண்டு குழுக்களாக பிரிந்து இந்த பயணம் நடந்து வருகிறது. ஆனாலும் நாளை ராணுவ தளவாட கண்காட்சியை துவக்க வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும், தமிழ் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் ஐபிஎல்லுக்கு எதிராக நேற்று சென்னையில் நடந்த ஆவேசப்போராட்டம் போலீஸ் அதிகாரிகளை சிந்திக்க வைத்துள்ளது. இந்நிலையில் நாளை சென்னை வந்து மஹாபலிபுரம் சென்று மீண்டும் கிண்டி ஐஐடிக்கு வந்து டெல்லி செல்லும் பிரதமருக்கு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டப்படும் வாய்ப்பு உண்டு.

அப்படி நடக்கும் பட்சத்தில் தங்களுக்கு அது சங்கடத்தை உருவாக்கும் என ஆளுங்கட்சித்தரப்பில் எண்ணுவதாக கூறப்படுகிறது, ஆகவே போலீஸார் போராட்டத்தில் ஈடுபட உள்ள அனைத்துக்கட்சித்தலைவர்கள், சீமான், பண்ருட்டி வேல்முருகன், தமீமுன் அன்சாரி உள்ளிட்ட அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள், இளைஞர் அமைப்பினர்களை முன்னெச்செரிக்கையாக கைது செய்ய முடிவெடுத்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

இன்றிரவு முதல் கைது நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று உறுதிப்படுத்தபடாத தகவல் தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x