Published : 28 Apr 2024 04:02 AM
Last Updated : 28 Apr 2024 04:02 AM
சென்னை: சொந்த வாகனங்களில் இடம்பெற்றிருக்கும் அரசு முத்திரை, கட்சி சின்னம் போன்றவற்றை மே 1-ம் தேதிக்குள் நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனசென்னை போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக நேற்று வெளி யிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சொந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது, தனி நபர்களுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும், சென்னையில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், டிஎன்இபி, ஜிசிசி, காவல்துறை, முப்படை போன்ற துறைகள் அல்லது நிறுவனங்களின் பெயர்களைக் காணலாம்.
இது போன்ற ஸ்டிக்கர்கள் நம்பர் பிளேட்டிலும், வேறு பகுதியிலும் காணப்படும். இத்தகைய ஸ்டிக்கர்களை குற்றம்சாட்டப்பட்ட சிலர், தங்களது வாகனத்தில் தவறாகப் பயன்படுத்தி, காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகின்றனர்.
இது தவிர, பல தனியார் வாகனங்களில் ஒருசில அரசியல் கட்சியை சித்தரிக்கும் சின்னங்கள், மருத்துவர் அல்லது வழக்கறிஞர் என வெளிப் படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற எழுத்து, முத்திரை, சின்னம் போன்றவற்றை வாகனத்தில் இருந்து நீக்க மே 1-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது.
கடும் நடவடிக்கை: இதனை மீறுவோர் மீது, மே 2-ம் தேதி முதல், மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இத்துடன் பிரிவு 198-ன் ( மோட்டார் வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத குறியீடு ) கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும். நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப் படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் மோட்டார் வாகன விதி 177-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT