உடல் பருமன் அறுவை சிகிச்சையில் இளைஞர் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி அமைச்சரிடம் தந்தை மனு

ஹேமச்சந்திரன் | கோப்புப் படம்
ஹேமச்சந்திரன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: உடல் பருமன் அறுவை சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம், இளைஞரின் தந்தை மனு அளித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் ( 26 ) என்பவர் 156 கிலோ பருமன் இருந்ததால், உடல் உடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அவருக்கு உடல் பருமனை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்தபோது உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது தந்தை செல்வநாதன், சென்னையில் நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மருத்துவரின் ஆசை வார்த்தையை நம்பி அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தோம். சிறு அறுவை சிகிச்சை தான், எவ்வித ஆபத்தும், பக்க விளைவும் இருக்காது. அறுவை சிகிச்சை செய்த அன்றே வீடு திரும்பலாம் என மருத்துவர் தெரிவித்தார். அறுவை சிகிச்சைக்கு முன்,இதயம், நுரையீரல், சர்க்கரை நோய், மயக்கவியல் உள்ளிட்ட பல்துறை மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்றோம்.

அறுவை சிகிச்சைக்கு, மயக்கவியல் மருத்துவர் அனுமதி அளிக் காதபோதும், அறுவை சிகிச்சையில் மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, மற்றொரு தனியார் மருத்துமனைனயில் அனுமதிக்கப்பட்டார். அங்கு,ரூ.7.5 லட்சம் வரை செலவானது. ஆனால், மகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து, நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மேல் நடவடிக்கை வேண்டாம் என எழுதிய கடிதத்தில் எங்களை கையெழுத்திடுமாறு போலீஸார் வலியுறுத்தினர்.

போதிய அளவு மருத்துவ வசதிகள் இல்லாத மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்து, மகன் இறப்புக்கு காரணமான மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த சம்பவம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் தவறு செய்திருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிர மணியன் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in