Published : 02 Apr 2018 08:49 AM
Last Updated : 02 Apr 2018 08:49 AM

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் மீண்டும் பி.எட். படிப்பு: செனட் கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் மீண்டும் பி.எட். படிப்பு கொண்டு வர செனட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சென்னை பல்கலைக்கழக செனட் கூட்டம் ஆண்டுக்கு 2 முறை நடைபெறும். இந்த ஆண்டுக்கான முதல் செனட் கூட்டம் துணைவேந்தர் பி.துரைசாமி தலைமையில் நேற்று நடந்தது. பதிவாளர் இராம.சீனுவாசன் முன்னிலை வகித்தார். தொலைதூரக் கல்வித் திட்டத்தில் மீண்டும் பி.எட். படிப்பு தொடங்குவதற்கு சிண்டிகேட் மற்றும் கல்விக்குழு கூட்டத்தில் ஏற்கெனவே ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், நேற்று நடந்த செனட் கூட்டத்திலும் அதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.அதேபோல, பல்கலைக்கழக நிரந்தர இணைப்பு அங்கீகாரத்துக்கான கட்டணத்தை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தவும், பல்கலைக்கழகத்துக்கு தன்னாட்சிக் கல்லூரிகள் செலுத்த வேண்டிய சான்றிதழ் நடைமுறை, பராமரிப்புக் கட்டணத்தை அதிகரிக்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, இனிமேல் சான்றிதழ் பராமரிப்புக் கட்டணமாக இளங்கலை படிப்புக்கு ரூ.600, முதுகலை படிப்புக்கு ரூ.1,000, எம்.பில். படிப்புக்கு ரூ.2,000 வசூலிக்கப்படும்.

செனட் கூட்டத்தில் உறுப்பினர் பேராசிரியர் எஸ்.கருணாநிதி பேசும்போது, ‘‘சென்னை பல்கலைக்கழகத்தின் கிண்டி, தரமணி வளாகங்களில் காலியாக இருக்கும் துறைத் தலைவர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். அதற்குப் பதில் அளித்த துணைவேந்தர் துரைசாமி, ‘‘அண்ணாமலைப் பல்கலை. கூடுதல் ஆசிரியர் பிரச்சினையைத் தொடர்ந்து, புதிய நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் யுஜிசி விதிமுறைகளின்படி, ஆசிரியர்கள் இல்லாவிட்டால் பல்கலைக்கழகத்துக்கான நிதியுதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இதைக் கருத்தில்கொண்டு குறைந்தபட்சம் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கான காலியிடங்கள், பல்கலைக்கழகத்தின் சிறப்பு மையங்களில் உள்ள காலியிடங்கள் என 200 ஆசிரியர் பணியிடங்களை வரும் கல்வியாண்டில் நிரப்ப முன்னுரிமை அளிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x