Published : 28 Apr 2018 07:49 AM
Last Updated : 28 Apr 2018 07:49 AM

எண்ணூரில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய்; உத்திரமேரூர் வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது: ஐ.ஓ.சி. நோட்டீஸ் வழங்கியதால் விவசாயிகள் அதிர்ச்சி

எண்ணூரில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு உத்திரமேரூர் வழியாக குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை எடுத்துச் செல்ல இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) திட்டமிட்டுள்ளது. குழாய் பதிப்பதற்காக இப்பகுதி விவசாயிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீஸை யும் அனுப்பியுள்ளது.

சென்னை எண்ணூரில் இருந்து திருவள்ளூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எரிவாயுவை எடுத்துச் செல்ல இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது. இந்தக் குழாய் உத்திரமேரூர் வட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்கள் வழியாகச் செல்லவுள்ளது. இதனால் இந்தக் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு ஐ.ஓ.சி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சாத்தனஞ்சேரி, சீத்தனஞ்சேரி, குருமாஞ்சேரி, கரும்பாக்கம், அரும்புலியூர், பழவேரி, சீத்தாவரம், அருங்குணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. குழாய் செல்லும் இடங்களை அளவிட்டு சில இடங்களில் ஏற்கெனவே அளவுக் கல்லையும் ஐ.ஓ.சி நட்டுள்ளது.

இயற்கை எரிவாயு குழாயை எண்ணூரில் இருந்து தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்ல, இத்தனை சதுரஅடி பரப்புள்ள இடத்தின் நில உபயோக உரிமை கையகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் 21 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை வாங்கிய பல விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

சீத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி முனுசாமி(81) என்பவர் கூறும்போது, ‘‘எனக்கு 90 சென்ட் இடம் மட்டுமே உள்ளது. இதுதான் எங்கள் வாழ்வாதாரம். எனவே நிலம் கையகப்படுத்தப்பட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’’ என்றார்.

இக் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இல. வேணு கூறும்போது, ‘‘ஏற்கெனவே அழுக்கு எண்ணெய்யை எங்கள் கிராமம் வழியாக எடுத் துச் செல்கின்றனர். தற்போது இயற்கை எரிவாயு எடுத்துச் செல்லப் போவதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எதிர்ப்பு தெரிவித்தால், குழாய் பதித்த பின்னர் அந்த இடத்தில் விவசாயம் செய்ய அனுமதிப்போம் என்று கூறுவார்கள். ஆனால், அதற்குப் பின்பு பல கட்டுப்பாடுகளை விதிப்பார்கள்’’ என்றார்.

சமூக ஆர்வலர் வெற்றித் தமிழன் பேசும்போது, ‘‘மீத்தேன் எரிவாயு உள்ளிட்டவற்றை எடுப்பதற்கான முன்னோட்டமாகத்தான் இந்தக் குழாய் பதிக்கப்படுகிறது. அந்த எரிவாயுவை எடுத்து இந்த குழாய்க்கு இணைப்பு ஏற்படுத்தி தூத்துக்குடி துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்படலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதற்காக நம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட வேண்டுமா?’’ என் றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமதுவிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘எங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான கோரிக்கை எதுவும் வரவில்லை. அதுபோன்ற ஒரு நோட்டீஸ் வந்திருப்பதே நீங்கள் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.

ஐ.ஓ.சி நிலம் எடுப்பு அலுவலரால் இந்த நோட்டீஸ் விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இது விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டபோது, ‘‘குழாய் பதித்த பின்னர் அந்த இடத்தில் விவசாயிகள் விவசாயம் செய்யலாம். நிலத்தின் மதிப்பில் 40 சதவீதம் அவர்களுக்கு இழப்பீடாகவும் வழங்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x