திருவல்லிக்கேணியில் சிறுமியை முட்டி தள்ளிய மாடு: சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி தீவிரம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: திருவல்லிக்கேணியில் சிறுமியை மாடு முட்டிய நிலையில் அப்பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

சென்னையில் குறிப்பாக திருவல்லிக்கேணி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் சுற்றி வருவது தொடர் கதையாக உள்ளது. மாநகராட்சி சார்பில் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றும் மாடுகளைப் பிடித்து, அபராதம் விதித்து வந்தாலும் அப்பகுதியில் மாடுகள் திரிவதும், பொதுமக்களை முட்டி காயப்படுத்துவது தொடர்கிறது.

நேற்று முன்தினம் இரவு திருவல்லிக்கேணியில் நீலம் பாஷா தர்கா பகுதியில் 10 வயது சிறுமி மளிகைக் கடைக்குச் சென்றபோது, அவரை மாடு முட்டித் தள்ளியது.

கடும் வயிற்று வலியால் துடித்த அவரை அப்பகுதி மக்கள் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். வெளிக் காயங்கள் இல்லாத நிலையில், எக்ஸ்-ரே உள்ளிட்ட பரிசோதனை செய்து, சிகிச்சைக்குப் பின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “சிறுமியை முட்டிய மாட்டை அடையாளம் காண நடவடிக்கை எடுத்து வருகிறோம். அப்பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வருகிறோம். மாடு பிடிக்கும் வாகனத்தை திருவல்லிக்கேணியிலேயே நிறுத்தி வைத்திருக்கிறோம்.

கடந்த ஆண்டு சென்னை முழுவதும் 4 ஆயிரத்து 230 மாடுகளைப் பிடித்து அபராதம் விதித்திருக்கிறோம். இந்த ஆண்டு இதுவரை 817 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது நலமாக இருக்கிறார்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in