

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 5-வது வழித் தடத்தில் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ. தொலைவுக்கு நீட்டிப்பு தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 6 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. 2 மாதங்களில் தகுதியான ஆலோசனை நிறுவனம் தேர்வு செய்யப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், 3 வழித் தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் 2028-ம்ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு வழித்தடமான மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தை கோயம்பேடு முதல் ஆவடி வரைநீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, சாத்தியக் கூறு அறிக்கை தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, இதன்அறிக்கை தயார் செய்து, தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் சமர்ப்பித்தது. இவற்றை ஆய்வு செய்த தமிழக அரசு, ஆவடி – கோயம்பேடு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, அடுத்தகட்டமாக, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 6 ஆலோசனை நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்த நிறுவனங்களில் தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித் தடத்தில் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ. தொலைவுக்கு நீட்டிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான, ஒப்பந்தப் புள்ளியில் ஆர்வி அசோசியேட்ஸ் நிறுவனம், ஏகாம்இந்தியா பிரைவேட் லிமிடெட், பார்சில் பிரைவேட் லிமிடெட், ரைட்ஸ் லிமிடெட், சிஸ்ட்ரா லிமிடெட், அர்பன்மாஸ் டிரான்சிட் ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
நிதி ஏலத்தின்போது, குறைந்ததொகை பதிவு செய்யும் தகுதியான நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தநடைமுறை முடிவடைய 2 மாதங்கள் ஆகலாம். இந்த தடத்தில் சுமார் 15 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையசாத்தியக்கூறு இருக்கிறது. மதிப்பிடப்பட்ட செலவு தொகை ரூ.6,376.18 கோடி. இந்த திட்ட அறிக்கை 6 மாதங்களில் தயாரிக்கப்படும். இதில், உயர்மட்டப் பாதை வழித் தடங்கள், ரயில் நிலையங்கள், திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும் என்று கூறினர்.