Published : 25 Apr 2024 04:45 AM
Last Updated : 25 Apr 2024 04:45 AM

தபால் மூலம் 2.48 லட்சம் போக்குவரத்து ஆவணங்கள் விநியோகம்: விண்ணப்பதாரர் சரியான முகவரியை குறிப்பிட அறிவுறுத்தல்

சென்னை: தபால் மூலம் 2.48 லட்சம் போக்குவரத்து ஆவணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம், விண்ணப்பத்தில் பொதுமக்கள் சரியான முகவரியை குறிப்பிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 45 பகுதி அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்படுகின்றன.

இதனை பொதுமக்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்வதைத் தவிர்க்கும் விதமாக அவற்றை இந்திய தபால் துறையுடன் இணைந்து விரைவு தபால்மூலமாக அனுப்பும் பணியை கடந்த பிப்.28-ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

அதன்படி, மார்ச் மாதம் மட்டும்2 லட்சத்து 51,501 சான்றுகள் அனுப்பப்பட்டதில் 2 லட்சத்து 48,986 சான்றுகள் உரியவர்களைச் சென்று சேர்ந்துள்ளது. விண்ணப்பித்த 99 சதவீதமானோர் அலுவலகத்துக்கு வராமலேயே தங்களது சான்றுகளை தபால் மூலமாக பெற்றுக் கொண்டனர்.

மீதமுள்ள 1 சதவீதசான்றுகள் மட்டுமே உரியவர்களை அடையவில்லை. இதற்குசம்பந்தப்பட்டவர்கள் விண்ணப்பத்தில் முகவரியை சரியாக குறிப்பிடாமல், ஓட்டுநர் உரிம பள்ளிகளின் முகவரியை கொடுத்திருப்பதும், தொடர்பில்லாதவர்களின் முகவரியை கொடுத்திருப்பதுமே காரணமாகும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது முகவரியை தெளிவாக குறிப்பிடும்பட்சத்தில் மட்டுமே அவர்களுக்குரிய சான்று குறிப்பிட்ட முக வரிக்கு அவரிடமோ அல்லது அவரது குடும்ப உறுப்பினரிடமோ ஒப்படைக்கப்படும். மாறாக, தொடர்பில்லாத முகவரியை அளித்திருந்தால் அந்த தபால் அவரை சென்றடையாமல் மீண்டும் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கே திருப்பி அனுப்பப்படும்.

அத்தகைய நேர்வுகளில் விண்ணப்பதாரர்கள் உரிய தபால் வில்லை ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் கவரை அலுவலகத்தில் ஒப்படைத்தால் மட்டுமே அவருக்குரிய சான்று மீண்டும் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

எக்காரணம் கொண்டும் திரும்ப பெறப்பட்ட தபால்கள் மீண்டும் உரிய நபரிடம் நேரடியாகவழங்கப்படாது. எனவே பொதுமக்கள் தங்களது சரியான முகவரியை விண்ணப்பத்தில் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x