Published : 26 Apr 2018 09:31 AM
Last Updated : 26 Apr 2018 09:31 AM

பெரம்பூர் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் சர்வதேச தரத்தில் 2 புதிய வகை ரயில்கள் தயாரிக்கும் பணி தீவிரம்: ஐசிஎப் பொதுமேலாளர் எஸ்.மணி தகவல்

பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலை யில் ரயில் - 18, ரயில் - 20 என இரண்டு புதிய வகை ரயில்கள் சர்வதேச தரத்தில் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது என ஐசிஎப் பொதுமேலாளர் எஸ்.மணி தெரிவித்துள்ளார்.

பெரம்பூரில் உள்ள இணைப் புப் பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎப்) கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் குறித்து விளக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில், ஐசிஎப் பொதுமேலாளர் எஸ்.மணி பேசும்போது, ‘‘ஐசிஎப் தொழிற்சாலை யில் காலத்துக்கு ஏற்றவாறு, தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறோம். அதற்கான கட்டமைப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த ஆண்டு மொத்தம் 2,503 பெட்டிகள் தயாரித்துள்ளோம். இந்த நிதி ஆண்டில் மொத்தம் 3,000 ரயில் பெட்டிகளைத் தயாரிக்கவுள்ளோம். இதற்கிடையே, ரயில் - 18, ரயில் - 20 என இரண்டு புதிய வகை ரயில்களை சர்வதேச தரத்தில் தயாரிக்கவுள்ளோம். இதில், ஒட்டுமொத்த ரயில் பயணிகளுக்கும் சிறப்பான சேவை அளிக்கும் வகையில் இருக்கும்’’ என்றார்.

ரயில் - 18

இதுதொடர்பாக ஐசிஎப் செயலாளர் கே.என்.பாபு, துணை தலைமை இயந்திரவியல் பொறியாளர் திலீப்குமார் ஆகியோர் கூறியதாவது:

வழக்கமாக இயக்கப்படும் விரைவு ரயிலைக் காட்டிலும் ரயில் - 18-ல் பல்வேறு முக்கிய மாற்றங்கள் இருக்கும். ரயில் இன்ஜின் தனியாக இணைக்கப் படாமல், வெளிநாடுகளில் இருப்பது போல், ரயில் பெட்டி களுடன் இணைத்தே ரயில் இன்ஜின் இருக்கும். ஒரு ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகம் செல்லும் வகையில் புதிய தொழில்நுட்ப வசதியுடன் பெட்டிகளும் தயாரிக்கப்படுகின் றன.

சர்வதேச அளவில் தரமும், பயணிகள் வசதியும் இருக்கும். குறிப்பாக, வைஃபை வசதி, திரைகள் மூலம் ரயில் நிலையம் குறித்த தகவல்கள், பையோ கழிவறை, பெட்டிகளில் ஏசி வசதி, மற்ற பெட்டி களுக்கு பயணிகள் எளிமையாக செல்லும் வசதி, எல்இடி விளக்கு கள் உள்ளிட்ட வசதிகள் இதில் இடம்பெறும். ரயில்கள் வேகமாகச் சென்றாலும் அதிர்வுகள் குறைந்து சொகுசாக பயணத்தை பயணிகள் மேற்கொள்ள முடியும்.

அவசர காலத்தில் பயன் படுத்தும் வகையில் டிஸ்க் பிரேக் சிஸ்டம் இருக்கிறது. படுக்கை வசதி இருக்காது, இருக்கை வசதி மட்டுமே இருக்கும். பகல் நேரத்தில் இயக்கப்படும் ரயிலாக இது இருக்கும். இந்த புதிய ரயில் தயாரிப்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் முதல் ரயில் தயாரிக்கும் பணி முடிவடையும். எந்த வழித்தடத்தில், எப்போது இயக்கப்படும் என்பது குறித்து இந்திய ரயில்வே வாரியம்தான் முடிவு செய்யும்.

ரயில் - 20

நாட்டிலேயே முதல்முறையாக அலுமினிய ரயில் பெட்டி இங்கு தயாரிக்கவுள்ளது. இதற்காக வெளிநாட்டில் இருந்து ஒரு ரயில் பெட்டியைக் கொண்டு வந்து ஆய்வு செய்து, அதன்படி, தயாரிக்கவுள்ளோம். படுக்கை வசதியுடன் இந்த புதிய ரயிலில் இன்ஜினுடன் சேர்த்து தயாரிக்கப்படும். தலா 20 பெட்டிகள் என மொத்தம் 24 ரயில்களைத் தயாரிக்கவுள்ளோம். தானியங்கி கதவுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், வைஃபை வசதி உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். ஐசிஎப் தொழிற்சாலையின் கடந்த நிதி ஆண்டின் விற்றுமுதல் சுமார் ரூ.5,500 கோடியாகும். இதுவே வரும் நிதி ஆண்டில் ரூ.7,000 கோடி முதல் 7,700 கோடியாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x