

உடுமலை: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக, உடுமலையை அருகே கேரள எல்லை வழியாக வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தும் பணி நடைபெற்றது.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் இருந்து கோழி, முட்டை, தீவனங்கள் ஆகியவை தமிழகத்துக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்து வரும் வாகனங்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில், கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் புகழேந்தி மேற்பார்வையில் உடுமலையை அடுத்த ஒன்பதாறு சோதனைச் சாவடியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஓர் உதவி மருத்துவர்,ஆய்வாளர், 2 உதவியாளர்கள் கொண்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 3 ஷிப்ட் அடிப்படையில் இரவு, பகலாக கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து உதவி இயக்குநர் ஜெய ராமன் கூறும்போது, ‘‘கோழிகளை தாக்கும் பறவை காய்ச்சல், கேரளாவில் பரவி வருவது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இந்த கிருமிகள் மனிதர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ளது. எனவே, கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படும். அதே போல, அம்மாநிலத்தில் இருந்து கோழி உள்ளிட்ட அது தொடர்பான எவையும் தமிழக பகுதிக்குள் கொண்டு வர அனுமதி இல்லை’’ என்றார்.