Published : 08 Apr 2018 09:14 AM
Last Updated : 08 Apr 2018 09:14 AM

துறைமுகம் - மதுரவாயல் இடையேயான உயர்மட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை: சென்னை துறைமுக தலைவர் ரவீந்திரன் தகவல்

துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தி உள்ளதாக சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: உலக வர்த்தகம் தொய்வடைந்த நிலையில், சென்னை துறைமுகம் 2017-18 நிதியாண்டில் 51.88 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த இலக்கான 48.88 மில்லியன் டன்னைவிட 3 மில்லியன் டன் அதாவது, 6 சதவீதம் அதிகமாக சரக்குகளைக் கையாண்டுள்ளது. இதில், 30 மில்லியன் டன் கன்டெய்னர் சரக்குகளும், 13.5 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களும் அடங்கும். இதன்மூலம், ரூ.32 கோடி லாபம் கிடைத்துள்ளது.

அம்பேத்கர் மற்றும் ஜவஹர் கப்பல் நிறுத்தும் தளங்கள் 15 மீட்டர் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், 8 ஆயிரம் மில்லியன் டன் எடையுள்ள சரக்குக் கப்பல்களை இங்கு நிறுத்த முடியும். கன்டெய்னர் மற்றும் பிற சரக்கு வாகனங்கள் துரிதமாக துறைமுகத்துக்குள் நுழையவும், வெளியேறவும் துறைமுக நுழைவு வாயில் எண் 1-ல் புதிய பன்வழி பாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாளொன்றுக்கு 2 ஆயிரம் கன்டெய்னர் லாரிகள் விரைவாக வந்து செல்ல முடியும்.

ரூ.16 கோடி செலவில் துறைமுகத்தில் உள்ள பயணிகள் முனையம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மப்பேட்டில் சிப்காட் கடல்சார் தொழில் நிறுவனங்கள் தொகுப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. சென்னை துறைமுகம் சார்பில், ஜோலார்பேட்டையில் பல்நோக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்காக ஆலோசகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையேயான உயர்மட்ட சாலைப் பணியை தொடருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து எல் அண்ட் டி நிறுவனம் ஆய்வறிக்கை தயாரிக்கிறது. அந்த அறிக்கை அடிப்படையில் சாலை அமைப்பதற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலைகள் துறை தொடங்க உள்ளது. துறைமுக வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, இத்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் தொடங்கி 2 ஆண்டுகளுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை துறைமுகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்து துறையிடம் வலியுறுத்தி உள்ளோம் என்றார்.

இந்தச் சந்திப்பின்போது, துறைமுக துணைத் தலைவர் சிரில் சி.ஜார்ஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x