Published : 24 Apr 2024 05:44 AM
Last Updated : 24 Apr 2024 05:44 AM
சென்னை: கடந்த ஓராண்டாக சென்னை பல்கலைக்கழகம் துணைவேந்தர் இல்லாமல் செயல்படுவது துரதிருஷ்டவசமானது என்றும், இதனால் மாணவர்களின் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவியை நிரப்புவதற்கான தேடுதல் குழுவில் யுஜிசி சார்பில் பிரதிநிதியை சேர்க்கவில்லை எனக்கூறி வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ஏற்கெனவே சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை நியமித்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தன்னை இணைக்கக்கோரி இந்த வழக்கின் மனுதாரர் மனுத்தாக்கல் செய்துள்ளார் என வாதிட்டார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்என்.எல்.ராஜா, துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தற்காலிக குழுவை அமைத்துள்ளது. இதனால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படக் கூடாது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த ஓராண்டாக சென்னை பல்கலைகழகம் துணைவேந்தர் இல்லாமல் செயல்படுவது துரதிருஷ்டவசமானது என்றும், இதனால் மாணவர்களின் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.
மேலும் துணைவேந்தர் நியமனம் தொடர்பான பிரச்சினை அதிகார அமைப்புகளுக்கு இடையிலான பிரச்சினை என்றும், மாணவர்களின் கல்வி குறித்தே நீதிமன்றம் கவலை கொள்கிறதேயன்றி மற்ற பிரச்சினைகள் பற்றி அல்ல எனவும், பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் அதிகார அமைப்புகள் கவனமுடன் செயலாற்ற வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து விசாரணையை வரும் ஜூன் 5-க்கு தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT