Published : 24 Apr 2024 06:22 AM
Last Updated : 24 Apr 2024 06:22 AM
சென்னை: நடப்பாண்டில் கோடை வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் ஆவின் மோர் விற்பனை அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது தினசரி 40,000 ஆவின் மோர் பாட்டில்கள் விற்பனையாகின்றன என்று ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 26 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, ஊதா, நீல நிற உறைகளில் (பாக்கெட்டுகளில்) அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர வெண்ணெய், நெய், தயிர் உட்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரித்து, ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது கோடைகால வெயில் வாட்டுவதால், தயிர், லஸ்ஸி, நறுமண பால், ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதிலும், ஆவின் மோர் விற்பனை ஜோராக நடைபெறுகிறது. 200 மில்லி ஆவின் மோர் பாட்டில் ரூ.12-க்கும், 200 மில்லி ஆவின் மோர் பாக்கெட் ரூ.8-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அம்பத்தூர் ஆவின் பால்பண்ணையில் மோர் பாட்டில், மோர் பாக்கெட் தயாரித்து, சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், ஆவின் பாலகம் ஆகியவை மூலமாக, விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டைஒப்பிடும்போது, ஆவின் மோர் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டின் கோடை காலத்தில் ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, ஆவின் ஐஸ் கிரீம், குல்பி ஐஸ், மோர் ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, ஆவின் மோர் விற்பனை அதிகரித்துள்ளது.
ஆவின் மோர் விற்பனை தற்போது தினசரி 40,000 ஆவின்பாட்டில்களும், 10,000 ஆவின் மோர் பாக்கெட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டில் கோடைகாலத்தில் தினசரி 30,000 மோர் பாட்டில்கள் விற்பனையாகின. தற்போது, தினசரி 40,000 பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனை அதிகரித்து வருவதால், அதற்கு ஏற்ப ஆவின் மோர் பாட்டில் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT