Published : 24 Apr 2024 04:18 AM
Last Updated : 24 Apr 2024 04:18 AM

நெல்லை கல்குவாரிகளில் வெளிமாநில சிறார்கள் - நடவடிக்கை எடுக்கப்படுமா?

பிரதிநிதித்துவப் படம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மானூர் தெற்கு செழியநல்லூரிலுள்ள கல் குவாரியில் கடந்த 3 நாட்களுக்கு முன் நடைபெற்ற விபத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த15 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு குவாரிகளிலும் வெளி மாநில சிறார்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தெற்கு செழிய நல்லூரிலுள்ள தனியார் கல்குவாரியின் கிரஷர் இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். ஆனால் மேல் நடவடிக்கை எதுவும் இல்லை. தற்போது அச்சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்குமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது. குவாரிகள் அனைத்தும் மத்திய அரசின் தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வருகின்றன.

தமிழக தொழிலாளர் நலத்துறையின் கீழ் வரவில்லை என்று தொழிலாளர் நலத்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தது சிறுவன் என்பதால் பதிவு செய்யப்பட்ட தொழிலாளியின் பலன்கள் எதுவும் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, மத்திய தொழிலாளர் துறை தலையிட்டு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால், பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மண்டல தொழிலாளர் நல அலுவலகம் கைவிரித்துவிட்டதாக தெரிகிறது.

மத்திய அரசின் கனிம வளத்துறை மற்றும் மத்திய தொழிலாளர் துறை இது போன்ற தனியார் குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் போதே 18 வயதுக்கு குறைந்தவர்களை வேலைக்கு அமர்த்த கூடாது என தெளிவாக குறிப்பிட்டு அனுமதி வழங்குவதாகவும், ஆனால், பெருவாரியான குவாரி உரிமையாளர்கள் அதை கடைபிடிப்பதில்லை. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் வரும் இத்தகைய குவாரிகளின் பாதுகாப்பு அம்சங்களை மத்திய அரசு முறையாக பராமரிப்பது இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அடங்கிய குழுக்களை அமைத்து குவாரிகளில் ஆய்வு செய்தால் சிறார்களை பணியில் அமர்த்துவதையும், விபத்து மரணங்களையும் தடுக்க முடியும் என்று தமிழக தொழிலாளர் நலத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேலையாள் இழப்பீடு சட்டம், - வொர்க் மேன் காம்பன்சேஷன் ஆக்ட் - அடிப்படையில் சிறுவனின் வயது மற்றும் உயிரோடு இருந்திருந்தால் பார்க்கும் வேலையின் தன்மை மற்றும் வருமானம் ஆகியவற்றை கணக்கிட்டு சிறுவனின் பெற்றோர், இணை ஆணையர் தொழிலாளர் நலத்துறையின் முன்பாக வழக்கு பதிவு செய்தால் வழக்கின் தன்மையை பொறுத்து இழப்பீடு கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் குவாரி கிரஷர்களில் வெளி மாநில சிறார்கள் பணியமர்த்தப் பட்டுள்ளது குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான ஆய்வை மேற்கொண்டு, சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தால் அவர்களை மீட்கவும், சம்பந்தப்பட்ட குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x