Last Updated : 23 Apr, 2024 09:42 PM

 

Published : 23 Apr 2024 09:42 PM
Last Updated : 23 Apr 2024 09:42 PM

நெல்லையில் திமுக கவுன்சிலர் ராஜினாமா கடிதத்தால் பரபரப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி 36-வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னத்தாய் கிருஷ்ணனின் ராஜினாமா கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பாளையங்கோட்டை திமுக எம்.எல்.ஏ. அப்துல்வகாப் சமரசத்தை அடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டுவந்தனர். ஆனால் திமுக தலைமையின் தலையீட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் திமுக உள்ளிட்ட மற்ற கட்சி கவுன்சிலர்களும் பங்கேற்கவில்லை. ஆனாலும் மேயருக்கு எதிரான செயல்பாடுகளை திமுக கவுன்சிலர்கள் கைவிடவில்லை. மாமன்ற கூட்டத்தில் கொண்டுவரப்படும் தீர்மானங்களை நிறைவேற்ற கவுன்சிலர்கள் ஒத்துழைக்காமல் இருப்பதால் பல்வேறு திட்டப்பணிகளும் கிடப்பில் உள்ளன.

கடந்த மார்ச் தொடக்கத்தில் மாநகராட்சி 7-வது திமுக கவுன்சிலர் இந்திராமணி ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் அளித்தார். தனது வார்டில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை என்பதால் மக்களை சந்திக்க முடியவில்லை என்று தெரிவித்து பதவியை ராஜினாமா செய்வதாக இந்திராமணி தெரிவித்தார். ஆனால் அந்த ராஜினாமா கடிதத்தை மேயரிடம் அளிக்க வேண்டும் என்று ஆணையர் தெரிவித்தார். இதனிடையே கடந்த மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒத்துழைக்காததால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் பட்ஜெட் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து, மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து மாநகராட்சி பிரச்சினை ஓய்திருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் இங்கு பிரச்சினை தலைதூக்கியிருக்கிறது. இம்மாநகராட்சி 36-வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னத்தாய் கிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்த கடிதத்துடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்ததை அடுத்து மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த கடிதம் விவரம்: “எனது வார்டு பகுதியான கோரிப்பள்ளம், பெரியார்நகர் ஆகிய பகுதிகளுக்கு பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள சரோஜினி நீர்த்தேக்க தொட்டியின் மூலம் பல ஆண்டுகளாக ஒருநாள்விட்டு ஒருநாள் தண்ணீர் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது. மாநகராட்சி அதிகாரி, உயர் ஜாதி மாமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து என்னை பழிவாங்கும் நோக்கில் அந்த நடைமுறையை மாற்றி அமைத்ததன் மூலம் எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இது குறித்து உயர் அதிகாரிகள், கட்சியினரிடம் எடுத்துக்கூறியும் பிரச்சினையை நிவர்த்தி செய்யவில்லை. தற்போது எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்து வருகிறது. வார்டு தொடர்பாக எந்த ஒரு பணியையும் அதிகாரிகளிடம் எடுத்து கூறினாலும் சாதி அடிப்படையில் அதை கண்டுகொள்ளவில்லை. அண்ணாநகர் பகுதியில் பல ஆண்டுகளாக நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நிரந்தர தீர்வு இல்லை. குடிநீர் பிரச்சினை மட்டுமின்றி தூய்மை பணி, மின்விளக்கு பணி, கட்டுமான பணிகள் என்று அனைத்து பணிகளும் நடைபெறாமல் முடங்கியிருக்கிறது.

மாநகராட்சி அதிகாரிகளிடம் சாதி தலைவிரித்தாடுகிறது. தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் எனது வார்டில் பிரச்சாரம் முதல் பல்வேறு நிலைகளில் நான் அவமானப்பட்டேன் என்பதை மிகுந்த மனவேதனையுடன் கூறிக்கொள்வதோடு, இந்நிலை தொடர்ந்து கொண்டே இருப்பதால் எனது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

ஆனால், இந்த கடிதத்தை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளிடம் அவர் அளிக்கவில்லை. இந்தக் கடித விவகாரம் குறித்து தெரியவந்ததும் கவுன்சிலர் சின்னத்தாய் கிருஷ்ணனை பாளையங்கோட்டை தொகுதி திமுக எம்எல்ஏ அப்துல்வகாப் அழைத்து சமரசம் செய்தார்.

இதையடுத்து ராஜினாமா முடிவை சின்னத்தாய் கிருஷ்ணன் கைவிட்டு சென்றுவிட்டார். திருநெல்வேலி மாநகராட்சியில் மேலும் ஒரு திமுக கவுன்சிலர் திடீரென்று ராஜினாமா முடிவை எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x