Published : 23 Apr 2024 05:34 AM
Last Updated : 23 Apr 2024 05:34 AM
சென்னை: சென்னை முகப்பேர் பகுதியில் வாக்குப்பதிவால் மாநகராட்சி பள்ளி அலங்கோலமானதாக அப்பள்ளி மாணவி ஒருவர் மழலை மொழியில் சுட்டிக்காட்டியது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் நேற்று செய்தி வெளியான நிலையில், அதன் எதிரொலியாக அங்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சென்று ஆய்வு செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் மாநகராட்சி பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குச்சாவடி பணியில் 19ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னை முகப்பேர், வேணுகோபால் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியும் வாக்குச்சாவடியாக செயல்பட்ட நிலையில், வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அங்கு உணவு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் அங்கேயே போட்டு வைக்கப்பட்டிருந்தன.
தேர்தல் தொடர்பான விவரங்கள் மற்றும் வேட்பாளர்களின் விவரங்கள் பள்ளி சுவர்களில் ஒட்டப்பட்டு சுவர்களில் இருந்து பெயிண்ட் பெயர்ந்த நிலையில் இருந்தது. பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த அலமாரி மீது வாக்குச்சாவடி முகவர்கள் அமர்ந்து உடைத்து வைத்திருப்பதாக தெரிகிறது.
இது குறித்து அப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், ‘எங்கள்பள்ளியை என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்? எங்கள் பள்ளியை நாங்களே ஒழுங்காக வைத்திருக்கிறோம். படித்த உங்களுக்கு, வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா’ என்று மழலை மொழியில் கேள்விஎழுப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இது தொடர்பான செய்தி, ‘வாக்குப்பதிவால் அலங்கோலமான மாநகராட்சி பள்ளி: மழலை மொழியில் சுட்டிக்காட்டிய மாணவியின் வீடியோவைரல்’ என்ற தலைப்பில் ‘இந்து தமிழ்திசை' நாளிதழில் நேற்று வெளியானது. இச்செய்தி எதிரொலியாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், அம்பத்தூர் மண்டல மாநகராட்சி அதிகாரிகள், தொடர்புடைய பள்ளியில் நேற்று ஆய்வு செய்தனர்.
பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பள்ளி வளாகத்தில் இருந்த உணவு கழிவுகள் சனிக்கிழமையன்றே அகற்றப்பட்டது. சுவரொட்டிகள் ஒட்டியதால், மிகவும் குறைந்த அளவில் சுவற்றில் பெயிண்ட் உதிர்ந்துள்ளது. அதுவும், உடைந்த அலமாரிகளும் விரைந்து சரிசெய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT