

சென்னை: மயிலாப்பூரில் நள்ளிரவு ஏற்பட்ட மின் துண்டிப்பை கண்டித்துபொதுமக்கள், ராயப்பேட்டையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோடை காலம் தொடங்கியதையடுத்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொது மக்கள் அவதியடைந்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் மின் விசிறி மற்றும் குளிர்சாதன கருவிகளின் தேவைஅதிகரித்துள்ளது.
இதனால், மின் தேவையும் அதிகரித்துள்ளது. மின் சாதன கருவிகளை ஒரேநேரத்தில் அனைவரும் பயன்படுத்துவதால் அடிக்கடி மின் தடை மற்றும் மின் துண்டிப்பு ஏற்படுகிறது.
அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் மயிலாப்பூர் திருவள்ளுவர் தெரு, கணேசபுரம், திருவீதி அம்மன் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நீண்ட நேரமாகியும் மின் விநியோகம் வழங்கப்படவில்லை.
இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நள்ளிரவு 12.30 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து முற்றுகையிட்டு உடனடியாக மின் விநியோகம் வழங்கும்படி கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து ராயப்பேட்டை காவல் உதவி ஆணையர் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மின் விநியோகம் வர ஏற்பாடு செய்தனர். இதையடுத்து போராட்டத்தை பொது மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.