Published : 12 Apr 2018 08:09 AM
Last Updated : 12 Apr 2018 08:09 AM

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்: தூத்துக்குடியில் நல்லகண்ணு கைது

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தடையை மீறி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்திய, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உட்பட 127 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், விரிவாக்க பணிகளை தடுத்து நிறுத்தக் கோரியும் ஆலை அருகே உள்ள அ.குமரெட்டியாபுரம் மக்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 59-வது நாளாக தொடர்ந்தது. சுற்றுவட்டார கிராமங்களிலும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பங்கேற்று பேசினார். இந்த போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நல்லகண்ணு உட்பட 127 பேரை போலீஸார் கைது செய்தனர்.

லாரிகள் சிறைபிடிப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு வெளிநாட்டில் இருந்து தாமிர தாது கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்துள்ளது. அந்த தாமிர தாதுவானது லாரிகள் மூலம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை அறிந்ததும் சிப்காட் பகுதியில் 3 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், 3 லாரிகளையும் சிப்காட் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினர்.

தாமிர தாதுவை இறக்குமதி செய்யும் தனியார் ஷிப்பிங் நிறுவன அலுவலகத்தை போராட்டக் குழுவினர் நேற்று காலை முற்றுகையிட்டு தாமிர தாதுவை இறக்குமதி செய்யக் கூடாது என வலியுறுத்தி அந்நிறுவனத்தில் மனு அளித்தனர்.

அமைச்சர் விளக்கம்

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியது: ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க முடியாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியதே, ஆலையை மூடியதாகத்தான் அர்த்தம். இதில், எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆலையை மூடியதாகத்தான் இன்று உத்தரவு வந்துள்ளது. நிரந்தரத் தீர்வை முதல்வர் எடுத்துள்ளார். எனவே, போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும்.என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x