காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி @ ஐகோர்ட் 

மாணிக்கம் தாகூர் | கோப்புப்படம்
மாணிக்கம் தாகூர் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். அவரது ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை விநியோகித்ததனர். எனவே, அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக, ஏப்ரல் 14-ம் தேதி தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அளித்துள்ளேன்’ என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே நடவடிக்கை எடுப்பார்கள்.

மேலும், இதுதொடர்பாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in