Published : 22 Apr 2024 01:07 PM
Last Updated : 22 Apr 2024 01:07 PM

தி.மலை, ஆரணி மக்களவை தொகுதிகளில் 4% வாக்குகள் குறைவாக பதிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, ஆரணி மக்களவை தொகுதிகளில் கடந்த 3 தேர்தலை விட சுமார் 4 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன. உள்ளாட்சி தேர்தல், சட்டப் பேரவை தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதத்தை உயர்த்த தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. இருப்பினும், பலனில்லை. 80 சதவீத வாக்குப் பதிவை நெருங்க முடியாமல் திணறுகிறது. இதனால், வாக்குப் பதிவை அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டதால், 80 சதவீத வாக்குப் பதிவு கடந்து விடும் என்ற நம்பிக்கையில் தேர்தல் ஆணையம் காத்திருந்தது.

ஆனால், வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்தும் தேர்தல் ஆணையத்தின் முயற்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதியில் 69 சதவீத வாக்குகள் மட்டும் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம், திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளையும் விட்டு வைக்க தவறவில்லை. 80 சதவீத வாக்குப் பதிவை கடந்துவிட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தீவிரமாக செயல்பட்டார்.

விளையாட்டு, தொடர் ஓட்டம் உள்ளிட்டவற்றில் தானும் பங்கேற்றார். மேலும், பாராசூட்டில் பறந்து, மிகப்பெரிய ஒத்திகையை அரங்கேற்றினார். அவரது அனைத்து பராக்கிரம செயல்களும் கை கொடுக்கவில்லை. திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் வழக்கத்தைவிட குறைவான வாக்குகளே பதிவானது. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் கடந்த 2009-ல் 79.86 சதவீத வாக்குகள், கடந்த 2014-ல் 78.98 சதவீத வாக்குகள், கடந்த 2019-ல் 78.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 2024-ல் 73.88 வாக்குகள் மட்டுமே பதிவானது.

இதேபோல், ஆரணி மக்களவைத் தொகுதியில் கடந்த 2009-ல் 76.62 சதவீத வாக்குகள், கடந்த 2014-ல் 80.06 சதவீத வாக்குகள், கடந்த 2019-ல் 78.94 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 2024-ல் 75.65 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. விழிப்புணர்வுக்காக, தமிழகம் முழுவதும், மக்களின் பல கோடி ரூபாய் வரிப்பணத்தை தேர்தல் ஆணையம் செலவிட்டும், இலக்கை அடைய முடியாமல் போனது பேசும்பொருளாக மாறியுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, “வாக்களிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவது ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள். உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை மையமாக கொண்டு நடத்தப்பட்டுள்ளது.

இந்த வட்டத்தில் இருந்து அரசு உயர் அதிகாரிகள் வெளியே வரவில்லை. வாக்குப்பதிவு குறைவுக்கு கோடை வெயிலை காரணமாக கூறி கடந்து செல்லலாம். ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயில் இருக்கத்தான் செய்கிறது. அனைத்து தரப்பு மக்களை சென்றடையும் வகையில் “வாக்களிப் பதன் அவசியம்” குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x