Last Updated : 22 Apr, 2024 09:42 AM

6  

Published : 22 Apr 2024 09:42 AM
Last Updated : 22 Apr 2024 09:42 AM

கோவை மக்களவை தொகுதியில் 7 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை!

கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவில்லை. நூறு சதவீத வாக்களிப்பு இலக்கை எட்டுவதற்காக தேர்தல் ஆணையமும், அரசு துறைகளும் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

கோவை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6,124 வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் 64.81 சதவீதம் வாக்குப் பதிவு ஆகியுள்ளது. அதாவது, 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவில்லை. இது ஜனநாயகத்தில் ஆர்வம் கொண்டவர்களை கவலையடையச் செய்துள்ளது. ‘நூறு சதவீத வாக்களிப்பு’ என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. நூறு சதவீதம் என்ற இலக்கு சாத்தியமில்லாவிட்டாலும், 80 சதவீதம் என்ற இலக்கை அடைந்திருந்தால் கூட விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு பயன்கிடைத்ததாக கூறலாம். ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலை விட 1.03 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.

இது குறித்து, தென்னிந்திய மில்கள் சங்கத்தின் ( சைமா ) முன்னாள் தலைவர் ரவிசாம், மறு சுழற்சி ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் ( ஆர்டிஎப் ) தலைவர் ஜெய பால், தமிழ்நாடு, புதுச்சேரி குழந்தைகள் மருத்துவ குழுமத்தின் தலைவர் மருத்துவர் ராஜேந்திரன், இந்திய தொழில் வர்த்தக சபை முன்னாள் தலைவர் நந்தகுமார், இந்திய ஜவுளித் தொழிகள் கூட்டமைப்பின் ( சிட்டி ) முன்னாள் தலைவர் ராஜ் குமார் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அன்றைய தினத்தில் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றத் தவறுவது ஏற்புடையதல்ல. உடல்நலம் பாதிப்பு உள்ளிட்ட நியாயமான காரணங்களை மட்டும் ஏற்றுக்கொள்ளலாம். அதை விடுத்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா செல்வது, வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாக கூறுவது உள்ளிட்ட காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

நம் கடமையை செய்ய தவறிவிட்டு பின் விமான நிலைய மேம்பாடு, தொழில் வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்கள் என பல கோரிக்கைகள் குறித்து பேசுவது எந்த விதத்தில் நியாயம். தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படுவது ஜனநாயகக் கடமையை ஆற்ற உதவி செய்யவே. அதே போல் தொழில்முனைவோர் பலரும் வாக்களிக்காமல் வெளியூர் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். வாக்களிக் காதவர்கள் அரசியல் குறித்து பேசவே தகுதியற்றவர்கள்.

தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இருப்பினும் பலரிடம் அலட்சிய மன நிலை காணப்படுவது மிகவும் வேதனைக்குரியது. தேர்தல் ஆணையமும் அவர்கள் தரப்பில் வாக்காளர்களுக்கு உதவும் வகையில் எதிர்வரும் காலங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ரூ. 4 லட்சம் கோடி மதிப்பில் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தவிர, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, மகளிர் உரிமைத் தொகை, கல்வி உதவித்தொகை என பல்வேறு திட்டங்கள் மாநில அரசு சார்பில் செயல்படுத்தப்படுகின்றன. வாக்களிக்காதவர்கள் ரேஷன் பொருட்கள், மானியம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மூலம் பயன் பெறுவதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறும்போது, “கடந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் 63.86 சதவீதம் வாக்கு பதிவானது. தற்போது 64.81 சதவீதம். கடந்த தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்துடன் ஒப்பிடும்போது குறையவில்லை. மிகவும் அதிகமாக உயரவும் இல்லை” என்றார். சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, “வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். கட்டாயப்படுத்த முடியாது. வாக்காளர்களே தங்களது ஜனநாயக கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x