

சென்னை: வாக்குப்பதிவு முடிந்து 24 மணிநேரத்துக்கும் மேலாக, இறுதி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகாததற்கு அதற்கான செயலியில் உள்ள தொழில்நுட்ப சிக்கல், தரவுகளை பதிவு செய்வதில் ஏற்பட்ட தவறும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது. முந்தைய தேர்தல்களில், தொகுதி வாரியாகவும், சராசரியாகவும் வாக்குப்பதிவு நிலவரம் இரவு 9 மணிக்குள் தெரிவிக்கப்பட்டுவிடும். இதற்குமுன்பு, ஒவ்வொரு 2 மணி நேரத்துக்குமான வாக்குப்பதிவு சதவீதமும் வழங்கப்படும்.
மறுநாளில், விடுபட்டதையும் சேர்த்து இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிடுவார். இதில், வாக்குப்பதிவு அன்று இரவு வெளியிட்டதைவிட மறுநாள் வெளியிடப்படும் வாக்குப்பதிவு சதவீதம் பெரும்பாலும் 2 சதவீதம் அதிகரிப்பதை பார்க்க முடியும்.
அதேபோல இந்த தேர்தலிலும், ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் வாக்குப்பதிவு நிலவரத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்டார். அதில் இரவு 7 மணிக்கு வெளியிடப்பட்ட தகவல்படி, தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இதில், வழக்கமாக குறைவாக வாக்குப்பதிவு நடைபெறும் சென்னை மாவட்டத்தின் மத்திய சென்னை, தென்சென்னை தொகுதிகளில் 10 சதவீதத்துக்கு மேல் கூடுதலாக வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் குறைவு... - மறுநாள் இதை ஒட்டியே வாக்குப்பதிவு சதவீதம் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு வெளியான தேர்தல்ஆணையத்தின் உத்தேச வாக்குப்பதிவு தகவலில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் 69.46 சதவீதம் என குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக, சென்னையில் கடந்த 2019 மக்களவை தேர்தலைவிடவும் வாக்கு சதவீதம் குறைந்திருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்து 44 மணி நேரம் கழித்தே,இறுதி வாக்குப்பதிவு நிலவரம்69.72 சதவீதம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடர்பான தரவுகளை பதிவு செய்வது மற்றும் இதற்கான செயலியில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களே இந்த குழப்பம், தாமதத்துக்கு காரணமாக இருக்கும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
செல்போன் பயன்பாடு, செயலி ஆகியவை அமலுக்கு வருவதற்கு முன்பு, வாக்குச்சாவடி வாரியாக 2 மணி நேரத்துக்கு ஒருமுறை, பதிவான வாக்கு விவரத்தை மண்டல அதிகாரி சேகரித்து, சட்டப்பேரவை தொகுதிக்கான பொறுப்பு அலுவலரிடம் வழங்குவார். பின்னர், மக்களவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் தரவு தொகுக்கப்பட்டு, தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும்.
கடந்த 2014, 2016, 2019-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவை, சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களின்போதும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டது. அப்போது எந்த குழப்பமும் ஏற்பட்டது இல்லை.
அதேநேரம், செல்போன் பயன்பாடு வந்தபிறகு, அதில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் பரிமாறப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில், வாக்குப்பதிவு நிலவரத்துக்கான புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அப்போதும் இதுபோன்ற பிரச்சினை ஏதும் எழவில்லை. ஆனால் இந்த முறை, குழப்பம் ஏற்பட்டுள்ளது.
புதிராக உள்ளது: இதுகுறித்து தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கூறியதாவது: மண்டல அதிகாரி 2 மணி நேரத்துக்கு ஒருமுறையும், காவல் துறையினர் 1 மணி நேரத்துக்கு ஒருமுறையும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வாக்குப்பதிவு நிலவரத்தை பெறுகின்றனர். நாங்கள் செயலியிலும், வாட்ஸ் அப் மூலமும் அதிகாரிகளுக்கு அளிக்கிறோம்.
அதன்பின், வாக்குப்பதிவு முடிந்ததும், 17 சி படிவத்திலும் தரவுகளை சரிபார்த்து வழங்குகிறோம். இந்ததரவுகளை பதிவு செய்தே,மொத்த வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிடப்படுகிறது. இந்த விவரங்களை பதிவு செய்வதில் ஏற்பட்ட தவறே இந்த பிரச்சினைக்கு காரணமாக இருக்கும். இந்த முறையும், செயலி தவிர, நேரடியாக மண்டல அலுவலர்களும் தரவுகளை பெற்று, உயர் அதிகாரிகளிடம் வழங்கியுள்ள நிலையில், இந்த பிரச்சினை எப்படி உருவானது என்பது புதிராக உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
ஆனால், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு அனுப்பிய குறிப்பில், ‘‘அனைத்து தொகுதிகளிலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு விவரம் பெற முடியாத நிலையில், மாதிரி விவரம் தயாரிக்கப்பட்டு தோராயமாக வெளியிடப்பட்டது’’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.