

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே வெயிலில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஊத்தங்கரை அருகே ஆதாலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (33). இவர் தனியார் பால் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர் விடுமுறை நாட்களில் அவ்வப்போது தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.அதேபோல, தனது நண்பர்களுடன் நேற்று வெயிலில் முனுசாமி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, தாகம் எடுப்பதாகக் கூறி நண்பர்களிடம் தண்ணீர் கேட்டுள்ளார். நண்பர்கள் தண்ணீர் எடுத்து வருவதற்குள் கீழே மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, அவரை மீட்ட நண்பர்கள் உடனடியாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்குச் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட முனுசாமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முனுசாமிக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இதுதொடர்பாக ஊத்தங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.