Published : 22 Apr 2024 05:53 AM
Last Updated : 22 Apr 2024 05:53 AM
சென்னை: போதைப் பொருட்களின் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருவதாக பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அன்புமணி: சென்னை கண்ணகி நகரில் கஞ்சா வணிகர் உமாபதி என்பவரை கைது செய்வதற்காக சென்ற 2 போலீஸாரை கஞ்சா போதையில் இருந்த வணிகரும், அவரது நண்பரும் இணைந்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அதேபோல், கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கியுள்ளனர்.
கண்ணகி நகரைச் சேர்ந்த உமாபதி கஞ்சா வணிகம் செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவதால் அவருக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை. உமாபதி போன்றோரை கண்டாலே அஞ்சி நடுங்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதுமே இதேநிலை தான் காணப்படுகிறது. கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன் என அனைத்து வகையான போதைப் பொருட்களும் 24 மணி நேரமும் கிடைக்கின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருகிறது. தமிழக அரசு இனியாவது தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பிரேமலதா விஜயகாந்த்: சென்னையில் கஞ்சா மற்றும் போதை ஆசாமிகள் போலீஸாரை பொது வெளியில் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். ஸ்காட்லாந்து போலீஸாருக்கு இணையாக போற்றப்பட்ட நமது தமிழக காவல் துறையின் இன்றைய நிலை ‘உள்ளங்கை நெல்லிக்கனியாக’ தெரிவது வேதனை அளிக்கிறது. எனவே உடனடியாக ஆளும் அரசு இரும்புக்கரம் கொண்டு கஞ்சா போதையை தடுத்து சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT