கடந்த 2019 மக்களவை தேர்தலை காட்டிலும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 2.23% வாக்குப்பதிவு குறைவு

கடந்த 2019 மக்களவை தேர்தலை காட்டிலும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 2.23% வாக்குப்பதிவு குறைவு
Updated on
2 min read

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் ஒரு லட்சத்துக்கும் மேல் பெயர் விடுபட்டதாலும், பூத் சிலிப் முழுமையாக வழங்கப்படாத காரணத்தாலும், கடந்த, 2019 தேர்தலை காட்டிலும், 2.23 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில், 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதியில் மொத்தமுள்ள 4,28,244 வாக்காளர்களில் 2,47,636 பேரும் (57.83%), அம்பத்தூர் தொகுதியில் மொத்தமுள்ள 3,57,624 வாக்காளர்களில் 2,15,894 பேரும் (60.37%), ஆலந்தூர் தொகுதியில் மொத்தமுள்ள 3,83,424 வாக்காளர்களில் 2,24,026 பேரும் (57.81%), ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மொத்தமுள்ள 3,83,330 வாக்காளர்களில் 2,69,887 பேரும் (70.54%), பல்லாவரம் தொகுதியில் மொத்தமுள்ள 4,30,409 வாக்காளர்களில் 2,45,735 பேரும் (57.09%), தாம்பரம் தொகுதியில் மொத்தமுள்ள 3,99,088 வாக்காளர்களில் 2,32,847 பேரும் (58.34%) என, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 23,82,119 வாக்காளர்களில் 14,36,025 பேர் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர். அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் 60.21 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த, 2019 மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் குறைவாகும். கடந்த தேர்தலில், 62.44 சதவீத வாக்குகள் பதிவானது. இப்போது 60.21% மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவை எதிர்நோக்கி, தேர்தல் ஆணையமும், தமிழக அரசும், பல்வேறு அறிவிப்புகளை முன்கூட்டியே அறிவித்திருந்தன. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் பலன் கிட்டவில்லை.

எல்லாருமே கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அனைத்து நிறுவனங்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, சிறப்புப் பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ ரயில் சேவை போன்றவை இயக்கப்பட்டன. வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால்வாக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

குறைவுக்கு காரணம்: வாக்குப்பதிவு குறைவுக்கு வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படாதது மற்றும், வெயில் ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும். இந்த பூத் சிலிப்புகளை கிராம நிர்வாக அலுவலக ஊழியர்கள், வாக்குச்சாவடி அலுவலர் ஆகியோர் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்குவர்.

இந்தத் தேர்தலில் பூத் சிலிப் முழுமையாக வழங்கப்படவில்லை. மேலும், பூத் சிலிப் வழங்குவதற்காக எந்த ஊழியரும் வாக்குச்சாவடியில் பணியில் இல்லை. இதனால், சிலர் வாக்களிக்காமல் வீட்டுக்கு சென்று விட்டனர். சில வாக்காளர்கள் செல்போனில் பூத் சிலிப்பை பதிவிறக்கம் செய்து காண்பித்ததை தேர்தல் அலுவலர்கள் ஏற்கவில்லை.

வெயில் சுட்டெரித்து வந்ததால் காலை 11 மணி வரையும், மாலை 4 மணிக்கு மேலும் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வந்தனர். பகல் நேரத்தில் வாக்குச்சாவடிகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே வாக்காளர்கள் இருந்தனர்.

அதேபோல, லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலில் விடுபட்டுள்ளதும் பிரதான காரணமாக கூறப்படுகிறது. இதனால் பட்டியலில் பெயர் இல்லாதோர் வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன்திரும்பி சென்றுள்ளனர்.

வாக்குப்பதிவுக்கு பின் நடைபெற்ற வேட்பாளர்கள், முகவர்கள் ஆய்வுக் கூட்டத்தில், ஆட்சியரிடம் இந்த கருத்தை புகாராக தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in