Published : 22 Apr 2024 06:18 AM
Last Updated : 22 Apr 2024 06:18 AM
சென்னை: இயக்குநர் கே.சுப்ரமணியம் நினைவு அறக்கட்டளை மற்றும் நாரத கான சபா சார்பில் முதுபெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் 120-வது பிறந்த நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.
நாரத கான சபாவில் நடந்த இவ்விழாவுக்கு, மூத்த இயக்குநர் எஸ்பி.முத்துராமன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் தயாரித்த ‘திரையுலகத் தந்தை கே.சுப்ரமணியம்’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. அவரது நினைவைப் போற்றும் 2 மின் நூல்களும் வெளியிடப்பட்டன.
கே.சுப்ரமணியத்தின் வாரிசுகளான டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி, டாக்டர் மோகனா கிருஷ்ணசாமி, பாமா ரமணன், ராம்ஜி, ஷோபனா ராம்ஜி ஆகியோரை விழாக் குழுவினர் கவுரவப்படுத்தினர்.
மேலும், மூத்த நாகஸ்வர கலைஞர் செம்பனார்கோயில் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா, மூத்த பரதக்கலை ஆசிரியர் என்.எஸ்.ஜெயலட்சுமி, மூத்த மேடை நாடகக் கலைஞர் காத்தாடி ராமமூர்த்தி, ‘மாலி ஸ்டேஜ்’ நாடகக் குழுவை தலைமை தாங்கிநடத்தி வரும் முதுபெரும் நாடகக்கலைஞர் குடந்தை மாலி ஆகியநால்வருக்கும் இயக்குநர் கே.சுப்ரமணியம் நினைவு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது: பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம்: சாதிய இழிவுகள் பெரியவர்களின் மனதில் களையாக மண்டிக்கிடக்கிறதே தவிர, குழந்தைகளிடம் இல்லை; அதை அவர்கள் மண்டையில் ஏற்றாதீர்கள் என்பதை ‘பாலயோகினி’யில் இயக்குநர் கே.சுப்ரமணியம் அற்புதமாக படைத்திருந்தார்.
இந்தோ - ரஷ்ய கலாச்சார நட்புறவுக் கழக பொதுச் செயலாளர் ப.தங்கப்பன்: சோவியத் ரஷ்யாவுக்கும் இயக்குநர் கே.சுப்ரமணியனுக்குமான தொடர்பு ஆழமானது மட்டுமல்ல; இந்திய - சோவியத் நட்புறவை போற்றியது. ரஷ்யாவுக்கு முதன் முதலாகதமிழகத்தில் இருந்து கலைத்தூதுவர்களை அவர் தேர்ந்தெடுத்து அனுப்பியபோது, அதில்மக்களின் கலைஞர் என்.எஸ்.கிருஷ்ணன் - மதுரம் தம்பதி, மிகச்சிறந்தகலைஞன் நிமாய் கோஷ் ஆகியோரை இடம்பெறச் செய்தார். அவர் பரந்துபட்ட பார்வை கொண்டபடைப்பாளியாக திகழ்ந்தார்.
இயக்குநர் எஸ்பி.முத்துராமன்: சினிமா தொழிலாளர்கள் கலைஞர் சங்கம் உருவாக அடித்தளம் அமைத்ததுடன் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையைத் தோற்றுவித்தவர் கே.சுப்ரமணியம். இவ்வாறு அவர்கள் பேசினர்.
நிகழ்ச்சியில், கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.காமகோடி, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவர் குமார் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT