Published : 21 Apr 2024 05:26 AM
Last Updated : 21 Apr 2024 05:26 AM
சென்னை: ஜெய்பீம் படத்தின் உண்மை சம்பவத்தில் போலீஸாரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இறுதி இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருட்டு வழக்கு ஒன்றில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தைச் சேர்ந்த ராஜகண்ணு போலீஸாரின் சித்ரவதையால் உயிரிழந்தார். கணவரை மீட்டு தரக்கோரி அவரது மனைவி பார்வதி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ராஜகண்ணுவை அடித்துக்கொலை செய்த காவல்துறைக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் போலீஸாரால் பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் மனைவி மற்றும் உறவினர்களுக்கும் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் போலீஸாரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு சட்டப்படியான இறுதி இழப்பீட்டுத் தொகையை வழங்கக்கோரி ராஜகண்ணுவின் சகோதரி மகனான குளஞ்சியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நடந்தது. அதையடுத்து நீதிபதி, போலீஸாரின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட மனுதாரரின் குடும்பத்தாருக்கு உரிய இறுதி இழப்பீடு, வீட்டுமனை மற்றும் அரசு வேலை வழங்குவது உள்ளிட்ட நிவாரண உதவிகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.23-க்கு தள்ளி வைத்துள்ளார்.
கணவர் ராஜகண்ணுவின் மரணத்துக்கு நீதிகேட்டு அவரதுமனைவி பார்வதி கடந்த 1993-ம்ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடத்திய சட்டப்போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டேநடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் படம் தயாரித்து வெளியிடப்பட்டது என்பது குறி்ப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT