Published : 24 Apr 2018 11:01 AM
Last Updated : 24 Apr 2018 11:01 AM

ஊழல் குறித்து திமுக பேசுவதுதான் உலகிலேயே மிகச்சிறந்த நகைச்சுவை: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ஊழல் குறித்து  திமுக பேசுவது வேடிக்கையாக உள்ளது எனவும், அவ்வாறு பேசுவது உலகிலேயே மிகச்சிறந்த நகைச்சுவை எனவும், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை மெரினாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழக அரசு அரசியல் நெருக்கடி அளித்தது.

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக சட்ட நிபுணர்களிடம் ஆலோசிக்கப்பட்டது. காவிரி வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் நாம் வெற்றி பெறுவோம்.

அதிமுகவும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கி என்று ‘புரட்சி தலைவி நமது அம்மா’ நாளேட்டில் எழுதப்பட்ட கட்டுரைக்கு அரசியல் சாயம் பூக்கூடாது. அந்த கட்டுரை குறித்து நாளேட்டில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக உள்ளது. கூட்டணி குறித்து உரிய நேரம் வரும்போதுதான் கட்சி தலைமை முடிவெடுக்கும்.

அதிமுகவில் முடிவெடுக்கக்கூடிய ஒற்றைத் தலைமை இல்லாததால் தான் குழப்பம் நிலவுவதாக கூறுவது தவறு. அப்படியான கருத்துக்கு இடம் கிடையாது

ஊழலை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த கட்சி திமுக தான். அக்கட்சி ஊழல் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது. உளகளவில் சிறந்த நகைச்சுவையே அதுதான். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுகவின் ஆட்சி. தமிழக அரசின் ஒப்பந்தங்களில் வெளிப்படைத் தன்மை நிலவுகிறது.

கமல்ஹாசன் அவ்வப்போது ட்விட்டர், யுடியூபில் பேசிக்கொண்டிருக்கிறார். இப்போது எஸ்எம்எஸ் வழியாகவும் பேச ஆரம்பித்து, இறுதியில் காணாமல் போய் விடுவார்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x