Published : 20 Apr 2024 05:30 AM
Last Updated : 20 Apr 2024 05:30 AM
சென்னை: மத்திய சென்னை மக்களவை தொகுதியில் நேற்று அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது சென்னை பல்லவன்இல்லம் அருகே உள்ள தீவுத்திடல்கேந்திரிய வித்யாலயா பள்ளியில்165-வது வாக்குச்சாவடியில் வாக்காளர் ஒருவர் வாக்குப்பதிவை செலுத்தும்போது, நாம் தமிழர் கட்சி சின்னமான மைக் பதிவாகவில்லை என்று அக்கட்சி வேட்பாளர் டாக்டர் கார்த்திகேயனிடம் புகார் அளித்துள்ளார்.
அதையடுத்து அங்கு வந்த கார்த்திகேயன் வாக்குச்சாவடி உதவி தேர்தல் அலுவலரிடம் விவரம் கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அந்த வாக்குச்சாவடியில் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
அந்த நேரத்தில் வாக்கு செலுத்தவந்த மற்றவர்கள் தங்களை வாக்குப்பதிவு செலுத்த அனுமதிக்கா மல் இருப்பதைக் கண்டித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறை உயர் அதிகாரிகள், வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்குப்பதிவை நிறுத்தியதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கார்த்திகேயன், அக்கட்சி பூத் ஏஜென்ட்கள் உள்ளிட்டோரை வாக்குச்சாவடி வளாகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் வேட்பாளர் கார்த்திகேயன் கூறும்போது, ``வாக்காளர் ஒருவர் தாம் வாக்குச் செலுத்தும்போது 2 முறை பட்டனை அழுத்தியும் நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னம் பதிவாகவில்லை என்றும் திமுக சின்னத்தை அழுத்தினால் அந்த சின்னம் பதிவாகிறது என்றும் புகார் தெரிவித்தார்.
அதுகுறித்து கேட்டபோது, `சோதனை வாக்குப்பதிவு (டெஸ்ட்வோட்) நடத்த படிவம் இருக்கிறது, அதை பூர்த்தி செய்து கொடுங்கள்' என்று வாக்குச்சாவடி உதவி அலுவலர் தெரிவித்தார். மேலும் `சோதனை வாக்குப்பதிவில் நீங்கள் கூறிய குற்றச்சாட்டு நிரூபணமாகவில்லை என்றால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வோம்' என்று அவர் மிரட்டினார்.
`சோதனை வாக்குப்பதிவில் நான் கூறிய குற்றச்சாட்டு சரியாகஇருந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா' என்று கேட்டேன். அவர் சோதனை ஓட்டு போடலாம் என்று சொன்னதும் அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்து வாக்குச்சாவடியில் இருந்து எங்களை வெளியேற்றினர் என்று தெரிவித்தார்.
வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளிப்பதை காவல்துறையினர் தடுத்தனர். இதைக் கண்டித்துஅங்கே தரையில் அமர்ந்து வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சிஏஜென்ட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸாருக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
அசாதாரண சூழல் ஏற்பட்ட நிலையில் வேட்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு காவல் துறை வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், வாக்குப்பதிவு நடைபெற்றது. கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT