“தேர்தல் புறக்கணிப்பு தேவையற்றது... ‘நோட்டா’தான் இருக்கிறதே!” -  தம்பிதுரை @ கிருஷ்ணகிரி

“தேர்தல் புறக்கணிப்பு தேவையற்றது... ‘நோட்டா’தான் இருக்கிறதே!” -  தம்பிதுரை @ கிருஷ்ணகிரி
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: திமுக கட்சி, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் பாஜகவுடன் கள்ள உறவில் உள்ளது என கிருஷ்ணகிரியில் அதிமுக ராஜ்யசபா எம்.பி தம்பிதுரை கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்குப்பட்ட சிந்தகம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தன் குடும்பத்துடன் வந்த முன்னாள் துணை சபாநாயகரும், அதிமுக ராஜ்யசபா எம்.பியுமான தம்பிதுரை வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைப்பதால் வாக்குப்பதிவு சற்று மந்தமாக உள்ளது. மாலையில் அனைவரும் ஆர்வமுடன் வாக்களிப்பார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.

கிருஷ்ணகிரி தொகுதியில் சில கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதாக அறிந்தேன். அது தேவையற்றது. அதற்காகத்தான் நோட்டா என்ற ஒன்று இருக்கிறது என்பதை மக்கள் மறந்து விடுகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக கட்சிகளுக்குள்தான் போட்டி. மூன்றாவது கட்சியை அவர்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் திராவிட கட்சிகள் வந்த பிறகு தேசிய கட்சியான காங்கிரஸ், கட்சியே சரிவை சந்தித்தது. அக்கட்சி தலைவர் காமராஜரே சட்டப்பேரவை தேர்தலில் நிற்காமல், மக்களவைத் தேர்தலில் நின்றார்.

ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில், திமுகவினர் காங்கிரஸ் கூட்டணியோடு இருந்தபோதுதான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் பாஜக ஆட்சியில் தான் அவர்கள் சிறையில் இருந்து வெளியில் வந்தனர். திமுக கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் பாஜகவுடன் கள்ள உறவில் உள்ளது. ஆனால், அவர்கள் அதிமுக பாஜகவுடன் கள்ள உறவில் இருப்பதாக கூறுகின்றனர்.

பல்வேறு வழக்குகளில் பாஜக அரசு, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேகதாது அணை விவகாரத்தில் அவர்களது இண்டியா கூட்டணி தமிழகத்தில் ஒரு பேச்சு, கர்நாடகத்தில் ஒரு பேச்சை பேசுகின்றனர். அவர்கள் கூட்டணியில் உண்மையில்லை. கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்கு கிருஷ்ணராஜா சாகர் அணையிலிருந்து நீர் எடுக்கலாம். அதற்கு யாரும் இங்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால் மேகதாது அணை கட்டுவதாக கூறுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். தமிழகத்தில் தேர்தல் பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை நான் வகித்துள்ளேன். தமிழகம் முழுவதும் பரப்புரைக்கு சென்றபோது அதிமுகவை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். புதுச்சேரி உட்பட தமிழகத்தின், 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்" என்று தம்பிதுரை கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in