

நாமக்கல்: மோகனூர் அருகே சிப்காட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள என்.புதுப்பட்டி, வளையப்பட்டி, பரளி உள்ளிட்ட கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்கான சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அந்த அமைப்பின் மூலம், சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக் கோரி கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக, இதுவரை 57 கட்டங்களாக அவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில், இன்று மோகனூர் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மோகனூர் சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.