வாக்காளர்களுக்கு கூழ், மோர் - புதுச்சேரியில் பசுமைச் சூழலுடன் ஈர்த்த 2 வாக்குச்சாவடிகள்!

வாக்காளர்களுக்கு கூழ், மோர் - புதுச்சேரியில் பசுமைச் சூழலுடன் ஈர்த்த 2 வாக்குச்சாவடிகள்!
Updated on
2 min read

புதுச்சேரி: வாக்குப்பதிவை அதிகரிக்க பசுமை வாக்குச்சாவடி அமைத்துள்ளதுடன், வாக்காளர்களுக்கு கூழ், மோர், பதநீர், சுண்டல், கொலுக் கட்டையை தேர்தல்த் துறையினர் வழங்கினர்.

புதுவை மக்களவைத் தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. புதுவை மாநிலத்தில் மொத்தம் 967 வாக்குச்சாடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முழுமையாக மகளிர் மட்டும் செயல்படும் வாக்குச்சாவடி, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தனர். புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 பொது வாக்குச் சாவடிகள் ( எண் 14 பாகத்தில் 1, 2 ) பசுமை வாக்குச்சாவடிகளாக அமைக்கப்பட்டுள்ளன.

பசுமை பனை ஓலைகள், வாழை மரங்கள் மூலம் முன்பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதில் சிறுதானியமான கம்பு கதிர்கள் வைக்கப்பட்டுள்ளன. உள்ளே பனை ஓலை, தென்னை ஓலை மூலம் கூரை வேயப்பட்டுள்ளன. அதன் பக்கவாட்டில் தென்னை ஓலை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பனை உள்ளிட்ட இலைகள் மூலம் மயில் போன்ற பறவைகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண் அலங்காரப் பொருள்களும் தொங்கவிடப்பட்டுள்ளன.

வாக்களிக்கச் செல்வோரை கவரும் வகையில் பாரம்பரிய பாத்திரங்கள், பழங்கால வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவையும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட பசுமை வாக்குச்சாவடியில் முழுமையாக வாக்களிப்போம், மாதரை பெருமைப்படுத்துவோம், மனைகள் தோறும் பனை நடுவோம் என பல பண்பாட்டு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

பாரம்பரிய கட்டுமானம் கொண்ட வ.உ.சி பள்ளி மீண்டும் அதே முறையில் வடிவமைக்கப்பட்டது. பழங்கால வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் திருவிழா போல் வடிவமைப்பு இவ்வாக்குச் சாவடியில் உள்ளது. வாக்களிக்க வந்தோருக்கு காலையில் பதநீர் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து மோர் தந்தனர். பின்னர் கூழ் விநியோகம் நடந்தது. மாலையில் நவதானிய சுண்டலும், அதன் பின்னர் கொலுக் கட்டை தரவுள்ளனர். அத்துடன் துணிப்பையும் இலவசமாக தந்தனர்.

இது பற்றி தேர்தல் துறையிடம் கேட்டதற்கு, "கல்வி கற்றோர் உள்ள ராஜ்பவன் தொகுதியில் இந்த வாக்குச்சாவடிகளில் வாக்கு செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாகவுள்ளது. அதிகமானோரை வாக்களிக்க வைக்க பசுமை வாக்குச் சாவடியை அமைத்துள்ளோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in