

கோவை: கோவையில் மக்களவைத் தேர்தலை ஒட்டி ரேஸ் கோர்ஸ் நிர்மலா கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கும் மக்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் மரக்கன்றுகள் வழங்கி வருகின்றனர். அந்தக் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது கவனம் ஈர்த்துள்ளது.அதேபோல் வாக்காளர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ள ஏதுவாக பேனரும் வைக்கப்பட்டிருந்தது.
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. மதியம் 1 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 40.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், கோவையில் மக்களவைத் தேர்தலை ஒட்டி ரேஸ் கோர்ஸ் நிர்மலா கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கும் மக்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் மரக்கன்றுகள் வழங்கி வருகின்றனர்.
கோவை தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி 7 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக, பாஜக கட்சிகள் தலா இரு முறையும், அதிமுக ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த முறை கோவையில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், பாஜக சார்பில் அண்ணாமலை, நாதக சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.